அள்ளி வந்த மணலைக் கரை சேர்த்து மீண்டும் வளம் தேடிக் கடல் திரும்பியது அலை. அலைகளை எண்ணிக்கொண்டிருந்தான் சுரேன்; ஏதேதோ பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன் நான். இருவரின் கவனத்தையும் கலைத்தது "நெஞ்சில்...ஜில்..ஜில்..ஜில்..ஜில்". கார்த்தியிடமிருந்து அழைப்பு.
"எந்த இடத்துல இருக்கீங்க?"
"ரொம்ப கூட்டம் இல்ல...கண்டுபிடிக்கறது ஈசிதான், வா"
பத்து நிமிடங்களில் கார்த்தியும் வந்து சேர்ந்தான்.
"சௌக்கியமா?"
"மிகவும்" - சுரேன்
"ம்..ம்.." - நான்
"இன்னைக்கு நிலா அருமையா இருக்கில்ல?"
"ம்..ம்.." - நான்
"என்னடா ஆச்சு இவனுக்கு?, எல்லாத்துக்கும் ஒரு எழுத்துல பதில் சொல்றான்"
"அதாவது சொல்றானே..இவ்வளவு நேரம் மணல்ல ஜாமெட்ரி தான் போட்டுட்டிருந்தான்"
"ஏண்டா.... நாமெல்லாம் இஞினியரிங் படிச்சு என்னடா பிரயோஜ்னம்" - நான்
"டேய், பஜ்ஜி சாப்பிடலாமா?" - சுரேன்
"நான் சீரியசா பேசிட்டிருக்கேன்"
"பஜ்ஜி சாப்பிட்டா பெருசா காமெடியெல்லாம் வராதுடா, அப்பையும் சீரியசா பேசலாம். நான் 3 மணிக்கு அப்புறம் எதுவுமே சாப்பிடல, இப்போ பஜ்ஜி சாப்பிடாட்டி, என் நிலம சீரியஸ் ஆகிடும். நீங்க ரெண்டு பேரும், திரைக்கதைய ஆரம்பிங்க, நான் வந்து கதை வசனத்துல சேர்ந்துக்கறேன்"
"என்னடா திடீர்னு ஞானத்தேடல்?" - கார்த்தி
"இல்லடா, எவ்வளவோ பேர்க்குக் கனவா இருக்கற ஒரு காலேஜ்'ல படிக்கிற சான்ஸ் கெடச்சு, கவர்மெண்ட் செலவுலயே புத்தகம் வாங்கி, பீஸ் கட்டி, கடசில ஒரு தனியார் கம்பெனில வேலை செய்யறோம், இதுனால நம்ம மக்களுக்கு என்ன லாபம்"
"தெருத்தெருவா வேலை இல்லாம அலையாம, கடன் சொல்லாம இப்படி பஜ்ஜி சாப்பிடறோம் பாத்தியா, அதுவே ஒரு லாபம் தான். கார்த்தி உனக்கு வெங்காயமா, மிளகாயா?"
"வாழ்க்கை ஒரு பர்பஸ் இல்லாம போற மாதிரி இருக்குடா"
"அய்யயோ, வழக்கமா பீச்சுக்கு வந்தா கவிதை தேடுவான்..இன்னைக்குப் பர்பஸ் தேடி வந்திருக்கான் போலிருக்கே"
"ஏன் உனக்கு அப்படித்தோணுது?" - கார்த்தி
"எந்தக் கட்சி ஆட்சில இருந்தாலும் மக்கள் பசிலயும் நோய்கள்ளயும் படாதபாடு படறாங்க. குழந்தைங்கள படிக்க வைக்க முடியாம கஷ்டப்படறாங்க. இதுக்கெல்லாம் நாம என்ன செய்யறோம்?"
"நான் மாசாமாசம் டேக்ஸ் கட்றேன், சிக்னள்ல சிகப்பு விழுந்தோடனே வண்டிய நிறுத்திடறேன், பஸ்ல டிக்கெட் எடுக்கறேன், ஆகஸ்ட் 15 அன்னைக்குக் கொடி குத்திக்கிறேன்" - சுரேன்
"சரி நாம எல்லாரும் சரியா டேக்ஸ் கட்றோம்னு வை, அந்தப் பணத்த அதிகாரிகள் சரியா பயன்படுத்தறாங்கன்றியா?
"மூணு பேரும், அன்னியன் ஆகலான்றியா?" - சுரேன்
"IPS ஆகலாம். IAS ஆகலாம்" - கார்த்தி
"அப்பயும் நமக்கு முழு அதிகாரம் இருக்காதுடா. எல்லாத்துலயும் அரசியல் தலையீடு இருக்கும்"
"இப்படியே சாக்கு சொல்லிட்டிருந்தா, கண்டிப்பா நம்மளால ஒரு சின்னத்தெருவ கூட சுத்தம் செய்ய முடியாது" - கார்த்தி
"நீ ஏண்டா பெரிய லெவெல்ல யோசிக்கிற. முதல்ல நம்ம சக்திக்குள்ள என்ன முடியுதோ அத செய்வோம்" - சுரேன்
"......"
"அங்கப் பாரு, அந்தத்தெரு லைட் எரியல. உன் கிட்ட போன் இருக்கா? என் கிட்ட EB நம்பர் இருக்கு. உனக்கு ஒரு 10 நிமிஷ நேரமும், 2 ரூபா பேலன்ஸும் இருந்தா, அந்தத்தெரு விளக்க எரிய வைக்கலாம்" - சுரேன்
கொஞ்சம் ஆறுதல் அடைந்தவனாக எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அலை கொணர்ந்த மணலில் கொஞ்சம் காலணியில் ஒட்டிக்கொண்டு உடன் வந்தது.
கார்த்தி - இப்போது - IAS நேர்முகத்தேர்விற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறான்.
சுரேன் - இப்போது - சில மில்லியன் மரங்களை இந்தியாவெங்கும் நடும் திட்டத்தில் தீவிர பங்காற்றுகிறான்.
நான் - இன்னும் வாழ்க்கையின் பர்பஸைத்தேடிக்கொண்டிருக்கிறேன்..
13 years ago