குளிக்கச்செல்லும் முன் அன்று உடுத்திக்கொள்ள ஆடைகளை ஒவ்வொரு பையாகத்தேடி, கடைசியில் வெகு நாட்கள் திறந்திடாத ஒரு பையைத்திறந்து, அருவருப்பில் தூக்கி எறிந்தேன். காரணம் பைக்குள் மீசை முறுக்கிக்கொண்டிருந்த கரப்பான் பூச்சி. சில நொடிகள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பையை மீண்டும் எடுத்து எப்படியோ அதைப் பையிலிருந்து வெளியேற்றினேன்.குளியலறைக்குள் சென்றால் அங்கும் இருந்தது ஒரு கரப்பான். அறைக்குள் கரப்பான் இருப்பது உறுத்திக்கொண்டே இருக்க, குளியல் மீதான கவனம் குறைவாகவும், கரப்பான் மீதான கவனம் அதிகமாகவும் கொண்டு "சனி" நீராடினேன்.
கரப்பான், தேள், பூரான், மூட்டைப்பூச்சிகள் போன்றவற்றுடன், சிறு வயதிலிருந்து கொண்ட அனுபவங்களின் நினைவுகளில் நனைந்து வெளியேறிய போது, உடலெல்லாம் கால்கள் ஊர்வது போன்ற உணர்வு மேலிட்டது.
ஜன்னலருகில் பக் பக்கிய புறா, என்றும் ஆனந்தம் தருவது, இன்று ஏனொ வெறுப்பை ஏற்படுத்தியது."காக்கை குருவி எங்கள் ஜாதி", என்று பாரதியை நினைத்துக் கொஞ்சம் சாந்தப்பட்டுக்கொண்டேன். சிலந்திகள் மீது கல்லூரியில் காட்டிய கரிசனம் நினைவுக்கு வந்து மேற்கூரையைப் பார்த்ததில் பகீர் என்றது. ஒரு குளவிக் கூடு இருந்தது. அதில் குளவியேதும் இருக்கக்கூடாது என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன் (கடவுளோ, காப்பர் சல்பேட்டோ, எதன் மீதாவது நம்பிக்கை வைத்திருத்தல், இது போன்ற வேளைகளிலாவது உதவும்).
என் எல்லைக்குள் அன்று பலரும் அத்து மீறுவதாய்ப் பட்டது. அவ்வெண்ணம் தோன்றி ஓய்ந்த மறுகணமே, எது என் எல்லை என்று எங்ஙனம் தீர்மானமாயிற்று என்று எண்ணலானேன். கரப்பான்களை இதற்கு முன்னும் என்னறையில் கண்டிருக்கிறேன். அவை வாசம் செய்த அறைக்கு நான் வந்தேனா, அல்லது நான் வாசம் செய்யும் அறைக்கு அவை வந்தனவா என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. எல்லையை என் அறை என்று வைத்துக்கொள்ளாமல், இந்த விடுதியோ, இந்த நகரமோ என்று வைத்துக் கொண்டால், பெரும்பாலும், இந்தக் கரப்பானின் முன்னோர்கள்தான் எனக்கு முன் குடியேறியவர்களாக இருக்க வேண்டும். எனில், நான் அல்லவா, அவற்றின் எல்லைக்குள் அத்து மீறியவன்? குளவிக்கும், புறாவிற்கும் கூட இது பொருந்தும்.
உருவத்திலோ, புலனறிவிலோ பெரியவன் என்கிற ஆணவத்தில் அல்லவா இது என் எல்லை ஆனது? எவை, எங்கு, எப்படி இருக்க வேண்டும், எப்போது என்ன நடக்க வேண்டும் என்பதை ஓரளவுக்குத்தீர்மானிக்கும் வலிமை உள்ளதால், மனிதன் இந்தப் புவிக்கு உரிமை கொண்டாடுவதுதான், மக்களாட்சியா? இப்படிச் செய்வது தான் முன்னேற்றம் என்று தீர்மானித்துக்கொண்டு, பழங்குடி மக்களை அவர்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு அங்கு ரிசார்ட்களும், ஏவுகனைத்தளங்களும் அமைப்பத்தற்கு ஈடான செயலாகும், குளவிக்கூட்டைக் கலைப்பதும், சிலந்தி வலையைக் கிழிப்பதும்.
தலையையும் எண்ணங்களையும் துவட்டியவாறே கண்ணாடி முன் நிற்க, பின்னால் சுவரில் தெரிந்தது கரப்பான். அதைக் கொல்வதா, வெளியேற்றுவதா, அப்படியே விடுவதா என்று மூளை முப்பது வகையாக யோசித்தது. முப்பதும், ' நான்' என்னும் அகம்-பாவிதான்!
அறையை விட்டு அகற்றவே உரிமை இல்லாத நான் எப்படி, அவ்வுயிரை உலகை விட்டு அகற்றுவது என்று தெளிவடைந்தவனாக, இருப்பினும் உயர்திணைத் திமிருடன், கொஞ்சம் அன்பாக அதைக் காகிதத்தில் பிடித்து ஜன்னல் வழியே எறிந்தேன். அது புறாவிற்கு உணவாகலாம், உரிமை கோரி மீண்டும் என் அறை வரலாம்....வந்தால் மறுபடி விரட்டுவதில்லை என்று தீர்மானித்துக்கொண்டேன்.
படியிறங்கிச் சாலையில் நடக்கையில், சுவரொட்டியில் இருந்த பாரதியாரின் கண்ணைப் பார்க்க வெட்கமாய் இருந்தது.
13 years ago