நெசவுக்கலைக்கு இரையாகிறது பட்டுப்பூச்சிஎன்று ஆரம்பித்தது என் சிலந்திக்காதல். இப்படியாகப் பள்ளிப்பருவத்தில் விட்டத்தைப்பார்த்துக்கொட்டாவி விட்டப்பொழுதுகளில் சில சிலந்தி வலைகளில் கொஞ்சமாகச் சிக்கிச் சீக்கிரமே தப்பித்துக்கொண்டேன். பின்னர் கல்லூரியில் கால் பதித்த மாத்திரத்தில், கவிதையும் பதிக்க எண்ணிக் கூரையைப் பார்த்தபடி கூர் தீட்டிய போது கண்ணில் பட்டன ஒரு எட்டுக்கால் பூச்சியின் கால்கள் எட்டும் எட்டாமல்....அந்தக் கணத்திலிருந்து இன்று வரை தவறாமல் சிக்கிக்கொள்கிறேன் கண்ணில்படும் சிலந்தி வலையில் எல்லாம். சொல்லப்போனால் பாட நூல்களை விட நான் மிகவும் ஒட்டிக்கொண்டது சிலந்தி நூல்களில் தான்.
சிலந்தி வலையிலும்.......
சுவற்றைப்பார்த்து உறக்க நிலைக்குச் சென்ற மதியங்களில்,
எச்சில் மொழிந்த சிலந்தி,
கட்டி முடித்தது ஒரு கூடு.....
அடடா எச்சத்தில் ஒரு வினை முற்று!!
என்று இலக்கண மயக்கம் வந்ததுண்டு.
எல்லாப் பூச்சிகளும் அமித்தாப் பச்சனைப் போல 6 அடிகளுடன் தோன்றினாலும், இவை மட்டும் ஒருதிருக்குறள் இலவச இணைப்பு வாங்கியது போல் 2 அடிகள் கையூட்டாகப் பெறுகின்றன. சில வகைசிலந்திகளுக்கு எட்டு கண்கள் கூட உண்டாம்......extra கரங்களும் கண்களும் இருப்பதால்சிலந்திகள்தான் பூச்சி வகையராக்களின் கடவுளாக இருக்கும் என்று கூட எண்ணியதுண்டு.
ஒரு முறை குறுக்கெழுத்துப் போட்டிக்குப் புதிர்கள் தயார் செய்யும் பொழுது வழக்கம் போல் ஒருவலையில் சிக்கியதில் 'பழைமைக்கு அடையாளம் இந்த நூலகம் (5)' என்று புதிர் வைத்தேன் - 'நூலாம்படை' என்ற சொல்லுக்கு. 'கன்னிமரா' (இதுவும் ஐந்தெழுத்து) என்று எழுதியவர்கள் எல்லாம்பின்னர் அறைக்கு வந்து ரெளத்திரம் பழகிச்சென்றார்கள்.
மூன்றாம் ஆண்டில் எனக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்ட போது, எனக்கு முன்னரே குடிபுகுந்திருந்தது ஒரு சிலந்தி. 'அறைக்குள் மாளிகையா?' என்று ஒரு கவிதையைத் தெளித்தேன். ஏளனமாய்ப் பார்த்து விட்டு, தன் எச்ச வினையைத் தொடர்ந்தது.
பின்னொரு நாள், என் தந்தையின் வருகைமுன்னிட்டு, அழகியல் கருதி, ஒரு நன்மகனாய், கொஞ்சம்தயக்கத்துடன் சிலந்தி வெளியே சென்றிருந்த பொழுதில் அண்ணாமலை சரத்பாபு போலகூட்டைக்கலைத்தேன். ஒரு மணி நேரத்தில் இன்னும் அழகாய் எழும்பியிருந்தது ஒரு தொங்குதோட்டம்.
எத்தனை முறை வேண்டுமானாலும் கலைத்துக்கொள்..என்று என்னைத் தலை குனியச்செய்தான் அந்த அற்புதக்கலைஞன். அடுத்த நாளே, அறையில் சிலபடங்களை ஒட்டி வைத்தேன். ஒரு படத்தில் மலை, மற்றொன்றில் காடு, மூன்றாவதில் வயல், நான்காவது பாலைவனம். அவற்றின் அடியில், குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, பாலைத்திணை என்று எழுதினேன். சிலந்திக்கூடு இருந்த இடத்தில் நெய்தல் திணை என்றுஎழுதினேன். அங்கு விரிக்கப்பட்டிருந்த வலையில், மீனுக்குப் பதிலாக ஒரு ஈசல் பூச்சி மாட்டிஇருந்தது.
அற்பனே முடிந்தால் என் கலையைக்கொல்!!
காதலாகிக் கசிந்துருகிய காலத்தில் கூட,
மற்றுமொரு முறை கலைக்கிறேன் காதல்
மீண்டும் குடியேறுகிறாள்
என் காதல் சிலந்தி
என்று உருவகத்திற்கு உருவினேன் சிலந்தி வலையை.
நான்கு ஆண்டு கல்லூரி வாசம் முடிந்து அறையைக் காலி செய்வதற்கு 2 நாட்களுக்கு முன் அன்னாந்துபார்த்த போது, காணாமல் போயிருந்தது சிலந்திக்கூடு.
இன்று கணினிகள் விரித்த வலையில் சிக்கிய பிறகு நேற்று காலை நினைத்துக்கொண்டேன் அந்த ஒற்றடை நாட்களை. இந்நேரம் மற்றுமொரு சிலந்தி ஏதாவது ஒரு அறையில் எவனுக்கேனும் போதி மரம் நெய்து கொண்டிருக்கும். இப்படி உலகெங்கும் நூல் எழுதிக்கொண்டிருக்கும் எல்லாச் சிலந்திக்கும், இந்த எழுத்துக்கள் சமர்ப்பணம் ஆகட்டும் !!!
நன்றி: 'எச்சம்-வினை' வார்த்தை விளையாடிய சேஷாத்ரிக்கும், 'நூலாம்படை' பின்ன நூல் கொடுத்த சுரேஷிற்கும்.
படம்: http://ringoblog.com/wp-content/uploads/2008/08/spider-web-ring.jpg