Monday, February 4, 2013

கொசுவரூபம்


குறிப்பு: இப்பதிவில் இடம்பெறும் எல்லா கதாபாத்திரங்களும் கற்பனையே (என்று குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன்).
"நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும்."
படிப்பவர் விக்கித்துப் போகும் அளவிற்கு  விக்கிப்பீடியா வர்ணிக்கும் நுளம்பு தன் வாயுறுப்பால் என்  குருதியை அகத்துறுஞ்சும் துன்பியல் செயல் நான் பிறந்த கி.பி 1982ம் வருடம் முதலே நடந்து கொண்டிருப்பதுதான். நுளம்பு என்பது அறிவியல் புனை கதைகளில் வரும் வேற்று கிரக விலங்கெல்லாம் இல்லை.... நம் இரத்த பந்தமாகிய "கொசு" தான். "கொசுவப் பத்தியெல்லாம் பிளாக் எழுதறான்யா" என்று "சமநோக்கு சன்மார்க்க" விருதுக்கு என்னைச் சிபாரிசு செய்யும் முன் என் கதையைக் கேட்டு விடுங்கள்.

80 டிகிரி வடக்கு தீர்க்க ரேகையும் 23 டிகிரி  கிழக்கு அட்ச ரேகையும் முட்டும் இடத்தில் அமைந்திருக்கும் சைதாப்பேட்டையில் நான் வாசம் செய்வது இந்தச் சமூகம் அறிந்ததே. மேற்படி சைதையில், கொசுக்கள், பதினாறும், மேலும் பல கோடியும் பெற்று பெரு வாழ்வு  வாழ்வது பற்றி அறியாதவர் அறிந்து கொள்க. விடுதியில் நான் சேர்ந்தபொழுதே, ஏற்கனவே இங்கே வாசம் செய்து வந்த அனுபவசாலி நண்பர்கள் கொசுக்களுடனான‌ தங்கள் இரத்த உறவு குறித்து எச்சரிக்கை செய்தனர்.காந்தியத்தில் நாட்டம் உடையவனாகக் கூறிக்கொள்ளும் நான், சுதேசி மற்றும் அகிம்சாவாதத்*  தயாரிப்பான  குட் நைட் திரவத்தை (* - ஆதாரம்) ஒரு மாதம் உபயோகித்தேன். திரவத்தின் தரத்தாலோ, அல்லது கொசுச் சமூகத்தின் பொங்கல் நோன்பு காரணமாகவோ இரவுகளில் அதிகத் தொந்தரவு இன்றி உறங்க முடிந்த‌து.

நிற்க. மேற்படி நித்திரை சுகம் ஒரு மாதமே நீடித்தது. வீரியம் பெருக்கின‌ கொசுப்படைகள். ரீங்காரமிட்டபடி திசைகள் பலவற்றிலிருந்தும் தாக்கிக் குருதி குடித்தன. சென்னை உஷ்ணத்திலும் போர்வைக்குள் விரைப்பாக உறங்க வேண்டிய நிலை.  பிரமிடுகளுக்குள் சென்று பதனிடலாக்கப்பட்ட எகிப்து மம்மிகளிடமிருந்தே இரத்தம் உறிஞ்சும் திறன் கொண்டவை எங்கள் பகுதி கொசுக்கள். என் போர்வை  வித்தைகள் எம்மாத்திரம்! என் போர்வை வியூகத்தை முறியடிக்க வீரப் போரிட்டுப் போர்வையில் ஆங்காங்கு இரத்தச் சரித்திரம் தெளித்திருந்தன சில கொசுக்கள். சில கொசுக்கள் வெற்றியும் பெற்று என் உடலெங்கும் கலிங்கத்துப் பரணி எழுதிச்சென்றன.

இனியும் பொறுத்தால் இரத்த சோகை  ஏற்படும் (எனக்கு!)  என்றஞ்சி செயலில் இறங்கியதில், முன்பொரு காலத்தில் நான்  நிகழ்த்திய சாதனையை நானே முறியடிக்க நேர்ந்தது. ஆம்....ரங்க நாதன் தெருவில் இறங்கி  யாருடைய காலையும் மிதிக்காமல் சரவணா ஸ்டோர்ஸை அடைந்தேன். கொசுவலை வாங்கினேன். கொசு வலையை அறையின் மத்தியிலே மிகவும் கோலாகலமாய்த் தோரண‌ம் கட்டினேன். இரவு பதினொரு மணி போல் கொசுக் கூடாரத்துக்குள் குடியேறிக் கட்டையைச் சாய்த்தேன்.


சில நிமிடங்களில் உறங்கிப் போனேன். கனவுலகில் சஞ்சரித்திருந்தவன் கைகளில் அரிப்பு ஏற்படவே, சொறிந்து கொள்ள நேர்ந்தது. ஏதோ சரியில்லை என்று ஆழ்மனம் எச்சரித்த‌து.  என்னவென்று புரிந்து கொண்டு கனவுலகில் இருந்து மீண்டு வர இரண்டொரு நிமிடங்கள் பிடித்தன. கண் விழித்துப் பார்த்தால் வலைக்குள் மிதவை வானூர்திகள் போல வட்டமிட்டுக் கொண்டிருந்தன கொசுக்கள்.  தூக்கக் கலக்கத்தில் அகிம்சைத் தத்துவம் ஆட்டம் கண்டது. நைட் லாம்ப் வெளிச்சத்தில்  முடிந்த வரை  காவு வாங்கினேன். பின் எழுந்து விளக்கைப் போட்டவன்  அதிர்ந்து போனேன். மானை வேட்டையாடும் ஓநாய்க் கூட்டம் போல கொசு வலையின் வெளிப்புறத்தில் வெறியோடு சூழ்ந்திருந்தன  கொசுக்கள்.  உற்று நோக்கினால் ஒவ்வொன்றும் நம்பியார் போல் கையைப் பிசைந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கே திகிலாக இருந்தது. பழையபடி போர்வைக்குள் சரணடைந்தேன்.


நேற்று சில பிரத்தியேக ஏற்பாடுகள் மூலம் கூண்டு போல கொசுவலையைக் கட்டிக் கொண்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்கு உறங்கினேன். இன்னும் சில நாட்களில் இந்த அமைப்பையும் இந்தக் கொசுக்கள் ஊடுருவி விடும். இரத்த தானம் செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கவும்.

Pictures courtesy:
www.zaidicentre.org 
www.deathbycupcakes01.blogspot.com
www.cartoonstock.com