Showing posts with label Thamizh. Show all posts
Showing posts with label Thamizh. Show all posts

Monday, February 4, 2013

கொசுவரூபம்


குறிப்பு: இப்பதிவில் இடம்பெறும் எல்லா கதாபாத்திரங்களும் கற்பனையே (என்று குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன்).
"நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும்."
படிப்பவர் விக்கித்துப் போகும் அளவிற்கு  விக்கிப்பீடியா வர்ணிக்கும் நுளம்பு தன் வாயுறுப்பால் என்  குருதியை அகத்துறுஞ்சும் துன்பியல் செயல் நான் பிறந்த கி.பி 1982ம் வருடம் முதலே நடந்து கொண்டிருப்பதுதான். நுளம்பு என்பது அறிவியல் புனை கதைகளில் வரும் வேற்று கிரக விலங்கெல்லாம் இல்லை.... நம் இரத்த பந்தமாகிய "கொசு" தான். "கொசுவப் பத்தியெல்லாம் பிளாக் எழுதறான்யா" என்று "சமநோக்கு சன்மார்க்க" விருதுக்கு என்னைச் சிபாரிசு செய்யும் முன் என் கதையைக் கேட்டு விடுங்கள்.

80 டிகிரி வடக்கு தீர்க்க ரேகையும் 23 டிகிரி  கிழக்கு அட்ச ரேகையும் முட்டும் இடத்தில் அமைந்திருக்கும் சைதாப்பேட்டையில் நான் வாசம் செய்வது இந்தச் சமூகம் அறிந்ததே. மேற்படி சைதையில், கொசுக்கள், பதினாறும், மேலும் பல கோடியும் பெற்று பெரு வாழ்வு  வாழ்வது பற்றி அறியாதவர் அறிந்து கொள்க. விடுதியில் நான் சேர்ந்தபொழுதே, ஏற்கனவே இங்கே வாசம் செய்து வந்த அனுபவசாலி நண்பர்கள் கொசுக்களுடனான‌ தங்கள் இரத்த உறவு குறித்து எச்சரிக்கை செய்தனர்.



காந்தியத்தில் நாட்டம் உடையவனாகக் கூறிக்கொள்ளும் நான், சுதேசி மற்றும் அகிம்சாவாதத்*  தயாரிப்பான  குட் நைட் திரவத்தை (* - ஆதாரம்) ஒரு மாதம் உபயோகித்தேன். திரவத்தின் தரத்தாலோ, அல்லது கொசுச் சமூகத்தின் பொங்கல் நோன்பு காரணமாகவோ இரவுகளில் அதிகத் தொந்தரவு இன்றி உறங்க முடிந்த‌து.

நிற்க. மேற்படி நித்திரை சுகம் ஒரு மாதமே நீடித்தது. வீரியம் பெருக்கின‌ கொசுப்படைகள். ரீங்காரமிட்டபடி திசைகள் பலவற்றிலிருந்தும் தாக்கிக் குருதி குடித்தன. சென்னை உஷ்ணத்திலும் போர்வைக்குள் விரைப்பாக உறங்க வேண்டிய நிலை.  பிரமிடுகளுக்குள் சென்று பதனிடலாக்கப்பட்ட எகிப்து மம்மிகளிடமிருந்தே இரத்தம் உறிஞ்சும் திறன் கொண்டவை எங்கள் பகுதி கொசுக்கள். என் போர்வை  வித்தைகள் எம்மாத்திரம்! என் போர்வை வியூகத்தை முறியடிக்க வீரப் போரிட்டுப் போர்வையில் ஆங்காங்கு இரத்தச் சரித்திரம் தெளித்திருந்தன சில கொசுக்கள். சில கொசுக்கள் வெற்றியும் பெற்று என் உடலெங்கும் கலிங்கத்துப் பரணி எழுதிச்சென்றன.

இனியும் பொறுத்தால் இரத்த சோகை  ஏற்படும் (எனக்கு!)  என்றஞ்சி செயலில் இறங்கியதில், முன்பொரு காலத்தில் நான்  நிகழ்த்திய சாதனையை நானே முறியடிக்க நேர்ந்தது. ஆம்....ரங்க நாதன் தெருவில் இறங்கி  யாருடைய காலையும் மிதிக்காமல் சரவணா ஸ்டோர்ஸை அடைந்தேன். கொசுவலை வாங்கினேன். கொசு வலையை அறையின் மத்தியிலே மிகவும் கோலாகலமாய்த் தோரண‌ம் கட்டினேன். இரவு பதினொரு மணி போல் கொசுக் கூடாரத்துக்குள் குடியேறிக் கட்டையைச் சாய்த்தேன்.


சில நிமிடங்களில் உறங்கிப் போனேன். கனவுலகில் சஞ்சரித்திருந்தவன் கைகளில் அரிப்பு ஏற்படவே, சொறிந்து கொள்ள நேர்ந்தது. ஏதோ சரியில்லை என்று ஆழ்மனம் எச்சரித்த‌து.  என்னவென்று புரிந்து கொண்டு கனவுலகில் இருந்து மீண்டு வர இரண்டொரு நிமிடங்கள் பிடித்தன. கண் விழித்துப் பார்த்தால் வலைக்குள் மிதவை வானூர்திகள் போல வட்டமிட்டுக் கொண்டிருந்தன கொசுக்கள்.  தூக்கக் கலக்கத்தில் அகிம்சைத் தத்துவம் ஆட்டம் கண்டது. நைட் லாம்ப் வெளிச்சத்தில்  முடிந்த வரை  காவு வாங்கினேன். பின் எழுந்து விளக்கைப் போட்டவன்  அதிர்ந்து போனேன். மானை வேட்டையாடும் ஓநாய்க் கூட்டம் போல கொசு வலையின் வெளிப்புறத்தில் வெறியோடு சூழ்ந்திருந்தன  கொசுக்கள்.  உற்று நோக்கினால் ஒவ்வொன்றும் நம்பியார் போல் கையைப் பிசைந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கே திகிலாக இருந்தது. பழையபடி போர்வைக்குள் சரணடைந்தேன்.


நேற்று சில பிரத்தியேக ஏற்பாடுகள் மூலம் கூண்டு போல கொசுவலையைக் கட்டிக் கொண்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்கு உறங்கினேன். இன்னும் சில நாட்களில் இந்த அமைப்பையும் இந்தக் கொசுக்கள் ஊடுருவி விடும். இரத்த தானம் செய்ய விரும்புவோர் விண்ணப்பிக்கவும்.

Pictures courtesy:
www.zaidicentre.org 
www.deathbycupcakes01.blogspot.com
www.cartoonstock.com

Saturday, December 24, 2011

சிலை வழி மேவும் உளி ஒலி தேடி - II


நவம்பர் 2011ல் நாங்கள் சென்றிருந்த சோழர்களின் கோயில்களைப்பற்றிய பயணத்தொடரின் இரண்டாம் பாகம் இது. (முதல் பாகம் இங்கே). நண்பன் வீரபாகுவின் யோசனைப்படி வரலாற்றுடன் கற்பனையைப் புனைந்து இப்பகுதியை எழுதியுள்ளேன். அதிக நேரம் செலவிட முடியாததால் குறைந்த அளவே ஆரய்ச்சி செய்ய முடிந்தது.எனவே தரம் எதிர்பார்க்க வேண்டாம். இந்தக் கதை பெரும்பாலும் கற்பனையே. விக்கிப்பீடியா மூலம் சேகரித்த செய்திகளை BOLD செய்துள்ளேன். (Click on the images to see a larger picture).

---------------------------------------------------------------------------------
அத்தியாயம் - 1

"ராஜ ராஜனே! இலங்கைப் பயணம் நல்ல படியாக முடிந்ததென்று கேள்விப்பட்டேன். மிக்க மகிழ்ச்சி".

"ஆம் மாமா. அங்கே நடந்த ஒரு சம்பவம் பற்றி, பிரதான அமைச்சர் என்ற முறையில் நான் உங்களிடம் ஆலோசனை செய்ய விரும்புகிறேன்".

"நல்லது"

"பயணத்தில் ஒரு இரவு புத்த மடம் ஒன்றில் தங்க நேர்ந்தது. அன்று நான் கண்ட கனவு என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது"

"என்ன கனவோ?"

"இப்போது சிறு சிறு காட்சிகள் மட்டுமே நினைவில் உள்ளன....நம் தலை நகருக்குள் யானைகள் நிறைய நுழைகின்றன. அதில் ஒரு யானை இந்திரனின் ஐராவதம் போல் வெண்மையாய் இருக்கிறது. மதம் கொண்டது போல் தெரிகிறது. மக்கள் என்னைத் தேடுகின்றனர். என்னைப் போன்ற ஒருவன் - அது நிச்சயம் நானில்லை - ஒரு சிங்கத்தில் ஏறி வருகின்றான். அவன் பின்னே பல சிங்கங்கள் பாய்ந்து வருகின்றன. ஒரு சிங்கம் ஒரு யானையைத் தாக்குகின்றது. சுற்றிலும் போர் காட்சிகள் போல் தோன்றுகின்றது. ஆனால் போர்க்களத்தில் இல்லாமல் நாட்டிற்குள் அப்பாவி மக்களைத்தாக்கும் விதத்தில் நடக்கிறது. மீன் கொடியைப் பார்த்ததாகவும் ஞாபகம். ஆனால் நிச்சயமாகக் கூற முடியவில்லை".

"களைப்பின் காரணமாக ஏற்பட்ட அர்த்தமற்ற கனவாக இருக்க வேண்டும். இது பற்றி கவலை கொள்ள வேண்டாம்".

"எதற்கும் கணியனாரிடம் ஒரு வார்த்தை கேட்டு விடலாம் என எண்ணினேன்"

"மன்னர் என்னை மன்னிக்க வேண்டும்! உங்கள் நம்பிக்கை, படை பலத்தைக் காட்டிலும் வான சாஸ்திரத்தில் நாளுக்கு நாள் வலுக்கிறது. பிரதான அமைச்சர் என்ற முறையில் எனக்கு இதில் ஒப்புதல் இல்லை. அதற்கு மேல் உங்கள் விருப்பம்".

"......................."

"புறப்படும் முன், ராஜாதி ராஜன் பற்றி, அறிந்து கொள்ள விரும்புகிறேன்".

"நிச்சயம்...இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கை தேவை. மற்ற விசயங்களை விரைவில் கற்றுக் கொள்வான் என்று நம்புகிறேன். இளவரசர் குலோத்துங்கனுக்குத் தங்கள் குமாரனின் துணை மிகவும் அவசியம். ராஜாதி ராஜனிடம் தஞ்சைப் பகுதியை ஒப்படைக்கலாம் என இருக்கிறேன்".

"நல்லது, நான் வருகிறேன்".
---------------------------------------------------------------------------------

அத்தியாயம் - 2

Ram was in deep thoughts after the phone call.

"Qui est-ce Ram?"

"Chidhambaram uncle"

"It was a long call. quelque chose de sérieux?"

"No..not serious. Actually, I am not sure. He didn't say so.."

"But you seem worried"

"Not worried...he is asking me if we could come to India"

"When?"

"As soon as possible. He is worried about dad. Things are getting worse in Lanka"

"Any new developments?"

"..the rebel groups are getting stronger..but seems the violence has increased. Lots of Tamils are fleeing to Tamil Nadu"

"I see.."

"Will you be able to take leave for about 2 weeks? Anyways, we have been planning a trip for about a year now".

"Let me check. What about you?"

"I have to go anyway - even if it means going on unpaid leave. The plan is that uncle will talk to the people in Mattakalappu to bring dad with them. The idea is, dad will somehow be brought to Tanjore by the time we reach there."

"ok..are you planning to bring him here?"

"It will be difficult to arrange for Visa that quick. It will be even more difficult to convince dad."

"Of course! He wants to be with your people"

"Yes..! God, I don't know if we really have our people there. Let us worry about bringing him later."

Senta held his hands as if to say 'things will be fine'.

"and...Senta, since Manga is here in Paris, I thought of taking him along with us. He wanted to see the temples."

"bien.."

"good...and Senta, I think I better tell you something that I haven't told you before"

"What? Don't tell me you have a lady love there!"

He smiled and continued.."The main reason why uncle is asking me to come there is to sort out a land problem...the land is in my name"

"I see!!"

"Yeah...it is a small piece of land in a place called Thaaraasuram - a small town. It is next to a temple - built by the Cholas."

"So, your supposedly forefathers did leave you something!"

"Senta..please! I have told you that I don't believe my dad's stories. The society has branched out so much and I have only a small piece of land there. I do not know if dad inherited it as a Chola descendant or through some corrupt moneylender".

"Hey..I was just kidding! You should develop a sens de l'humour".

"Seems the government is trying to buy up the land for some road construction. Uncle thinks I can use some influence and stop it".

"Why would you stop a road construction?"

"To preserve the temple - my dad and the family is so attached to the temple even though some of them do not believe in the Chola lineage story".

"What do you think?"

"I don't know. I do not want to disappoint dad. The land is in my name because he somehow believes that I will preserve it"

"All of it sounds too dramatic to me. Anyways, what influence do you have in India? As such you are a no body in Paris!"

"Right. But Manga could probably do something."

"Ram..what can a Filipino do in India?"

"A Filipino in the World Heritage Committee of UNESCO could do something. And I believe, the temple does deserve Manga's attention"

"Wow! If I am thinking what you are thinking...then Mr.Ram does have a plan. intelligentes!"

"Merci.."

---------------------------------------------------------------------------------
அத்தியாயம் - 3

"கணியனாரே, உங்களுக்குக்காகத் தான் காத்திருக்கிறேன். அமருங்கள்."

"மன்னா! நீங்கள் கூறிய கனவுகள் பற்றி கனவு சாஸ்திர நூல்களில் ஆராய்ந்தேன். நாட்டிற்குத் தீமை விளைய இருக்கிறது என்பதைக் கணிக்க முடிகிறது. அது போராகவும் இருக்கலாம். அல்லது பஞ்சமாகவும் இருக்கலாம்."

"அந்த அளவிற்கு என்னாலும் கணிக்க முடிந்தது. யானைகளுக்கும் சிங்கங்களுக்கும்...என்ன அர்த்தம்?"

"இலங்கையில் இருக்கும் கரையர் சமூகத்தின் சின்னம் யானை என்பதும், அவர்கள் தற்போது நம்முடன் நட்புறவோடு இல்லை என்பதும் உங்கள் மூலம் நான் அறிந்தது. இலங்கையில் நமக்கு ஆதரவாக இருக்கும் மன்னர்கள் சிங்கத்தைச் சின்னமாகக் கொண்டவர்கள் என்பதும் நாம் அறிந்ததே. ஒரு வேளை கரையர்கள் பாண்டியர்களுடன் சேர்ந்து நம்மைத் தாக்க வருவதற்கான் அறிகுறியாக இருக்கலாம் இக்கனவு."

"அப்படியா!..ம்ம்..சரி..குலோத்துங்கன் பற்றியும் ராஜாதி ராஜன் பற்றியும் கேட்டிருந்தேனே."

"ஆம் மன்னா! இளவரசரின் பிறப்பு நேரப்படி, அவர் சோழப்பேரரசை ஆள்வதில் தடை ஒன்றும் இல்லை, ஆனால் சமீபத்தில் நடக்கவிருக்கும் தீமை ஒன்றில் இருந்து அவரைக் காக்க வேண்டும். பிரதான அமைச்சரின் குமாரனின் பிறப்பு நேரப்படி,அவருக்கும் நாட்டை ஆளும் அம்சம் இருக்கிறது."

"இளையவன் பற்றியும் உங்களிடம் கேட்க வேண்டும். அவசரம் இல்லை. இப்போது போய் வாருங்கள்."

--------

"மன்னருக்கு வணக்கம்!"

"வணக்கம் ஸ்தபதியாரே..."

"நற்செய்தியோடு வந்திருக்கிறேன் மன்னா!"

"தாராசுரம் சென்று வந்தீரா?"

"ஆம் மன்னா! ஐராவதம் சாப விமோசனம் பெற்றதாகக் கூறப்படும் குளத்தையும் அருகில் வீற்றிருக்கும் ஐராவதேசுவரர் ஆலயத்தையும் கண்டோம்."

"அங்கு நான் குறிப்பிட்டிருந்தபடி பெரிய ஆலயம் கட்டுவதற்கான அமைப்பு உள்ளதா?"

"இருக்கிறது மன்னா! ஆனால், தஞ்சை பெரிய கோயில் உயரத்திற்கு அங்கு கட்டுவது சாத்தியமல்ல."

"அது நம் எண்ணமும் அல்ல! இரண்டாம் ராஜ ராஜ சோழன் இருக்கலாம் ஆனால் பெரிய கோவில் ஒன்று தான் இருக்க முடியும். வேறு வகையில் நாம் ஏதாவது புதுமை செய்ய வேண்டும்."

"நல்லது மன்னா! தஞ்சை கோயிலின் பிரம்மாண்டம் அதன் சிற்ப வேலைகளை மறைத்து விட்டது. சோழர் குடியின் சிற்பக் கலை வெளிப்படும் வகையில் நாம் இக்கோயிலைக் கட்டுவோம்."

"நல்ல யோசனை. மேலே கூறுங்கள்!"

"நிறைய தூண்கள் வைத்துக் கட்டினால் அவற்றில் இதிகாச காட்சிகளைச் சிற்பங்களாக உருவாக்கலாம். ஆலயத்தின் மண்டபத்தை மேலகடம்பூரில் உள்ளது போல் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்லும் ரதம் போல் வடிவமைக்கலாம்."

"ஒன்று செய்யுங்கள், உங்கள் கற்பனையை ஒரு சித்திரமாக எழுதி வாருங்கள். என் மனதிலும் புதிர் போல் சில காட்சிகள் உள்ளன. அவற்றையும் சிற்பங்களாக வடிவமைக்க முடியுமா என பார்க்கலாம்."

"ஆகட்டும் மன்னா!எனக்கு விடை கொடுங்கள்!"

---------------------------------------------------------------------------------

அத்தியாயம் - 4

"வாங்க வாங்க! மாப்ள, சவுக்கியமா இருக்கியா?" - வரவேற்றார் சிதம்பரம்.

"இருக்கேன் மாமா. நீங்க நல்லா இருக்கீங்களா?" - அவரைத்தழுவிக்கொண்டான் ராம்.

"வணக்கம் மாமா! சவுக்கியமா?" - என்று சுமாரான தமிழில் வினவினாள் சென்தா.

"பேஷ்! நல்லா தமிழ் பேசறியேமா...வெரி குட்."

"மாமா, இது என்னோட Friend மங்கவர்ணன். From Philippines." - மங்கவர்ணனை அறிமுகப்படுத்தினான்.

"Hallo Sir!"

"Pleased to meet you! Do you speak Tamil?"

"No sir, I wouldn't claim so", என்று கூறிவிட்டுச் சிரித்தான் மங்கவர்ணன்.

"அவன் பேசினா புரிஞ்சிப்பான். பேசத் தெரியாது. அவங்க வீட்ல எல்லாரும் நல்லா தமிழ் பேசுவாங்க."

"நல்லது. நான் English பேசிக் கஷ்டப்படத் தேவை இல்லை பாரு!வாங்க கார்ல போயிட்டே பேசலாம்" , என்று காரை நோக்கி நடக்க ஆரம்பித்தார் சிதம்பரம். மூவரும் அவரைத் தொடர்ந்தனர்.

"மாமா! Peugeot arrange பண்ணிட்டீங்களா! Super!" - பூரிப்போடு ராம் கேட்டான்.

"நான் பண்ணலப்பா. இந்தியால Peugeot வர்றதில்ல. நீ Peugeot கிடைக்குமான்னு கேட்டன்னு உங்க அப்பாக்கிட்ட சொன்னேன். அதுல சிங்க உருவம் பொறிச்சிருக்கும்னு சொல்லி, "நான் நெனச்சபடியே நடக்குது"ன்னான். யாரோ ஒரு சிலோன்காரர புடிச்சி வாங்கிட்டு வந்திட்டான். உனக்கு ஏதாவது புரியுதா?"

"இல்ல மாமா. எனக்கு Parisல Peugeot ஓட்டிப் பழக்கம் ஆயிட்டதால கெடச்சா பரவால்லனுதான் கேட்டேன். அப்பா இன்னும் அப்படியேதான் இருக்கார் போல."

"ஆமாம்பா. இப்போலாம் அதிகமா பேசறது இல்ல. இன்னைக்கு மருமக வரால்ல, பேசறானான்னு பாப்போம்."

சிதம்பரமும் சென்தாவும் முன்னிருக்கையில் அமர, ராம் மற்றும் மங்கவர்ணன் பின்னிருக்கையில் அமர்ந்தனர். சென்தா கையில் ஒரு தமிழ் புத்தகம் வைத்திருப்பதைக் கண்டார் சிதம்பரம்.

"என்னம்மா புத்தகம் அது?" என்றார் சென்தாவைப்பார்த்து.

"இது மாமாவுக்காக எடுத்துட்டு வந்தேன் மாமா. "இந்தோனேசியாவில் தமிழர்கள்" அப்படின்னு எங்க பெரியப்பா எழுதின புத்தகம்."

"மாமனாரை ice புடிச்சுருவ போலிருக்கே. அந்த அட்டைப்படத்த எங்கையோ பாத்த மாதிரி இருக்கு" என்றவாரு காரைச் செலுத்த ஆரம்பித்தார்.

அந்த அட்டைப்படத்தை அவள் ஒரு முறை பார்த்துக்கொண்டாள்.



"இதுவும் பெரியப்பா போட்டதுதான். அவர்கிட்ட இருந்த பழைய painting பாத்து போட்டது."

"நான் எதிர்பார்த்தத விட நல்லா தமிழ் பேசறியேமா!"

"இந்தோனெசியால எங்க தாத்தா பாட்டி எல்லாம் நல்லாவே தமிழ் பேசுவாங்க மாமா."

"பேஷ்! கல்யாணத்துக்குத்தான் என்னால வர முடியல! எனக்கும் உன்ன மாதிரியே ஒரு மக இருந்தா. சீதான்னு பேரு. அவ இருந்திருந்தா ராமுக்கு அவளத்தான் கட்டி வச்சிருப்போம். நாங்க எப்பயுமே குடும்பத்துக்குள்ளயே கல்யாணம் கட்டிக்கிறதுதான் வழக்கம்."

"'Senta'ன்ற பேருக்குக் கூட 'சீதா'ன்னு தான் மாமா அர்த்தம் - Javaneseல."

"அப்படியா! என்னோட மகளே வந்தாப்லதான்னு சொல்லு."

"ஆமா மாமா!" என்று சிரித்தாள்.

"நான் அவனுக்குத்தாம்மா மாமா. நீ என்னை அப்பான்னே கூப்பிடு."

"சரிப்பா."

வழியில் கடந்த கோயில்களைப் பற்றியும், கட்டிடங்கள் தெருக்கள் பற்றியும் ராம் மங்கவர்ணனுக்கு விளக்கிகொண்டு வந்தான்.

"எங்கள பத்தியெல்லாம் சொல்லிருக்கானா இவன்?" என்று சிதம்பரம் தொடர்ந்தார்.

"சொல்லிருக்காருப்பா. நீங்க சோழர்கள் வம்சம் அப்படின்றது பத்தி நிறைய சொல்லிருக்காரு.உண்மையாப்பா?"

"எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லமா. ராமுக்கும் கூட இல்ல. இங்க இருந்தா மார்க்கண்டேயனோட சேந்து இவனும் அப்படியே ஆயிடுவான்னுட்டுதான் எங்க அண்ணன் இவன France கூட்டிட்டுப் போயிட்டாரு. மார்க்கண்டேயன்றது அவனோட உண்மையான பேர் கூட இல்ல தெரியுமோ! பழைய ஓலைச் சுவடியெல்லாம் படிச்சிட்டு பேர மாத்திக்கிட்டான். நாங்க எப்பவுமே பசங்களுக்குச் சிவபெருமான் பேரு வக்கிறதுதான் வழக்கம். இவனுக்குத்தான் முதல்ல ராம்னு பேர் வச்சான். எங்க Generationல இப்படி நடக்கும்னு ஓலைச்சுவடில போட்டிருக்காம். தாராசுரம் கோயில்ல கூட இதுக்குக் குறிப்பு இருக்குன்னுல்லாம் சொல்லி எதாவது உளறிகிட்டே இருப்பான். என் தங்கச்சி, அதான், உன்னோட மாமியார், ரொம்ப அவதிப்பட்டா அவன வச்சுகிட்டு. அவ அழாத நாள் இல்ல. எப்படியோ ராம்-அ France அனுப்பி வச்சோமே!"

பேச்சின் போக்கை மாற்ற நினைத்த ராம், பின்னாலிருந்து..."சிலோன் பிரச்சன இப்போ எப்படி மாமா இருக்கு?"..என்றான்.

"அதை ஏம்பா கேக்கற? ரொம்ப அராஜகம் பண்றானுங்க. அகதிங்க சாரை சாரையா வந்துகிட்டு இருக்காங்க பாவம்! MGR அவரால முடிஞ்சத செய்யறாரு. போன மாசம் கூட அனுராதபுரத்துல நிறைய பேர கொன்னுட்டாங்க. இப்போதான் Rajiv Gandhi பேச்சு வார்த்தைக்குக் கூப்டிறுக்காறு. பூடான்ல பேசப்போறாங்க. நல்ல விதமா முடிஞ்சா பரவால்ல" என்றவர், தனக்குத்தானே, "ஈஸ்வரா மனுஷனுக்கு நல்ல புத்திய குடுப்பா!", என்றார்.

---------------------------------------------------------------------------------

அத்தியாயம் - 5

"மன்னா! வறட்சிப்பகுதிகளுக்குத் தேவையான தானியங்களை அனுப்பி வைத்துவிட்டோம்."

"நன்று! மேலும் பல பகுதிகளில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் அமைச்சரைச் சந்தித்து வறட்சி நிலை வருவதற்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறிச் சென்றுள்ளனர். நாம் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆக வேண்டியதைப் பாருங்கள். போய் வாருங்கள்!"

"வாருங்கள் மாமா!"

"ராஜ ராஜனே, வறட்சியைச் சாதகமாகக் கொண்டு பாண்டியர்கள் மக்களைப் புரட்சியில் ஈடுபடுத்த முயல்வதாக ஒற்றர்களிடம் இருந்து செய்தி வந்துள்ளது."

"அப்படியா!"

"இனி நாம் தாமதம் செய்வது நல்லதல்ல. குலோத்துங்கனையும் இளையவனையும் பல்லவராயருடன் விரைவில் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். சில நாட்கள் அவர்கள் கடல் தாண்டி வசிப்பதுதான் நல்லது. முன்பே ஆலோசித்தது போல் குலோத்துங்கன் போர் பயிற்சிகள் முடித்துத் திரும்பும் வரை ராஜாதி ராஜனை பட்டத்து இளவரசனாக அறிவித்தல் நன்று."

"ஆகட்டும் மாமா. தேவையான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்."

---------------------------------------------------------------------------------

அத்தியாயம் - 6



ராம், சென்தா, மங்கா, மார்க்கண்டேயன் நால்வரும், தாராசுரம் கோயிலில் இருந்தனர். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே சில குறிப்புகளும் எடுத்துக் கொண்டிருந்தான் மங்கா. ராம் அவனுக்கு உதவிக் கொண்டிருந்தான். அவர்களிடமிருந்து பத்து அடி தொலைவில் மார்க்கண்டேயன் தன் மருமகளுக்குச் சோழ வரலாற்றை விளக்கிக் கொண்டிருந்தார்.




"What animal is this?" என்று குறிப்பு எடுத்தவாறே கேட்டான் மங்கா.

"This is 'Yaali'. It is a mythological animal. It supposedly represents a lion. You will find them in almost all temples of Tamilnadu. Of course, this temple has a lot of them."





"Wow, these sculptures are wonderful", என்று கூறிய மங்கா, தன் புகைப்படக் கருவிக்குத் தீனி கொடுத்தான்.











"These sculptures show stories from Indian epics like Mahabharatha, Ramayana, Sivapuranam. Have you heard of them?"

"Yes, I have heard of Ramayana for sure. In fact Mangawarna is one of the main characters in Ramayana."

"Really? I never knew that man. What character?"

"He is the younger brother of Ram - in Filipino Ramayana. I think the popular name is Lakshmana."

"Amazing man. So, we are brothers..huh?"

"சென்தா, இங்க பாருமா, நீ எனக்குக் குடுத்த புத்தகத்துல இருந்த படம். பேய் ஓட்டுற மாதிரியான கற்பனை இது. இதுக்குப் பின்னால ஏதாவது கதை கூட இருக்கலாம். இந்த தாராசுரம் கோயிலே இரண்டாம் ராஜ ராஜ சோழன் கண்ட கனவுல வர காட்சிகள்னு ஓலைச் சுவடிகள்ள இருக்கு."




"I see. Raam, look at this. This resembles the painting in the front page of my uncle's book.""

"இந்தக் கோயில்ல ஏதோ குறிப்புகள் இருக்கறதா சிதம்பரம் மாமா சொன்னார்", என்று மார்க்கண்டேயனைப் பார்த்து கேட்டாள் சென்தா.

"ஆமா.." என்று அவளையும் ராமையும் மாறி மாறிப் பார்த்தார். விளக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் தயங்கினார்.

"எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்.. நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்...உங்க இஷ்டம்", என்று அவர்களைப் பார்த்துக் கூறி விட்டு, மங்காவை நோக்கி, "ஏம்பா மங்கா, உனக்குத் தமிழ்ல சொன்னா விளங்கும்ல?", என்றார்.

"Yes uncle, go ahead."

"இரண்டாம் ராஜ ராஜ சோழன் ஒரு பேரழிவு நடக்கப் போறதா கனவு கண்டான். கனவு முழுக்க சிங்கங்கள். யானைகளுக்கும் சிங்கங்களுக்கும் பெரிய போராட்டம் நடக்குது", என்று ஒரு சிற்பத்தைக் காண்பித்தார்.






"சிங்கத்த வாகனமாக் கொண்ட வீரன் ஒருத்தன் வந்து சோழ நிலத்த காப்பாத்துவான்னு மன்னன் நம்பினான்", என்று ஒரு சிற்பத்தைக் காட்டிவிட்டு ராமைப் பார்த்தார்.



" இரண்டாம் ராஜ ராஜ சோழனுக்கு அப்புறம் ராஜாதி ராஜன்னு ஒரு மன்னன் ஆட்சிப் பொறுப்பு ஏத்துக்கிறான். அவந்தான் இந்தக் கோயில கட்டி முடிச்சது. ஆனா அவன் இரண்டாம் ராஜ ராஜ சோழனுடைய மகன் இல்ல. அவனுக்கப்புறம் குலோத்துங்க சோழன் அப்படின்ற மன்னன் - அதாவது Third Kulothunga Chozhan - ஆட்சிக்கு வந்தான். அவன் தான் இரண்டாம் ராஜ ராஜ சோழனோட மூத்த மகன் அப்படின்னு சில ஆரய்ச்சியாளர்கள் சொல்றாங்க. இன்னொரு மகன் இப்ப இருக்கிற இந்தோனேசியாலயோ இலங்கைலையோ வளந்ததா சொல்றாங்க. என்ன பேர்னு தெரியல. அவனுடைய வம்சத்துல வந்தவங்கதான் எங்க குடும்பம் அப்படின்றது என்னோட ஆய்வுல நான் யூகிக்கிறது", என்று ஒரு தூண் அருகில் வந்து நின்றார்.




"இந்தத் தூண்ல எட்டு பக்கங்கள் இருக்கு. தன்னுடைய இறப்புக்குப் பிறகு எட்டு வருஷம் கழிச்சுத் தன்னுடய மகன் ஆட்சிக்கு வருவான்னு ராஜ ராஜன் நம்பினான். நமக்குக் கிடைக்கிற கல்வெட்டுகள வச்சு பாக்கறப்ப அப்படித்தான் நடந்ததுன்னு தெரியுது."

"இந்தச் சக்கரத்தப் பாருங்க. என்ன ஒரு அருமையான சிற்ப வேலைப்பாடு. இதுல முப்பத்தி ரெண்டு spokes இருக்கு. என்னோட கணக்குப்படி, spoke ஒவ்வொன்னும் இருபத்தி அஞ்சு வருஷத்த குறிக்குது. ராஜ ராஜ சோழன் இறந்து 800 வருஷம் ஆச்சு. அவன் வம்சத்த சேந்த ஒருத்தன் இப்போ இந்த மண்ண காக்க வரணும்."



"இப்போ ஒரு பேரழிவு வரப்போகுதுன்றீங்களா? என்னை யுகப்புருஷன்றீங்களா?", என்று கோபமாகக் கேட்டான் ராம்.

"அழிவு..சோழக்குடி மக்களுக்கு..சோழ நிலத்துக்கு. அது தாராசுர நிலமாவும் இருக்கலாம், இலங்கை நிலமாவும் இருக்கலாம். உன்னால ஏதாவது செய்ய முடியும்னு என்னால நம்பத்தான் முடியும். செய்யறது உன் கைலதான் இருக்கு. நீ யுகப்புருஷனா இல்லையான்னு தீர்மானிக்க வேண்டியது நீதான்."

"நீ ஒரு பத்திரிக்கைக்காரன். அதுவும் ஒரு மேல் நாட்டுப் பத்திரிக்கைல வேலை செய்யற. இலங்கைல பெட்ரோல் இல்ல. உங்க மேலை நாடுகளுக்கு இலங்கை ஒரு பொருட்டா இல்லாம போகலாம். ஆனா உங்க அப்பா இந்த மண்ல வளந்தவன். இவங்களுக்காக ஒரு சின்ன முயற்சியாவது செய்யற கடமை உனக்கு இருக்குன்னு தோணுச்சுன்னா, செய்."

"சோழ வம்சத்த சேந்தவன்றதுல உனக்கு நம்பிக்கை இல்லாம இருக்கலாம். ஆனா உன்னால ஏதாவது செய்ய முடியுன்றதுல எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று கூறிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டார்.

மற்ற மூவரும் அவரைப் பார்த்துக் கொண்டே நின்றனர். அவர்கள் தலைக்கு மேலே சோழன் கனவில் தோன்றிய காட்சி ஒன்று சிற்பமாக நின்றது. சீதை, லட்சுமணனோடு ராமன் நிற்க, மார்க்கண்டேயர் அவர்களை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்.



1987 - இரண்டு வருடங்களுக்குப் பிறகு
-------------------------------------------------

** ஐ. நா.வின் மனித உரிமைக் கழகம் இலங்கையில் அமைக்கப்பட்டது.

** "The great living Cholas" என்ற பெயரில் கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், தஞ்சை கோயில்கள் "UNESCO world heritage" தலங்களுள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டன.

--
Post-script: After I wrote this article, my sister shared the link to an article written by her in 'The Hindu'. You may be interested to read this article about history based fiction.

Tuesday, December 13, 2011

Beyond 'common sense'

காட்சி 1:
"அப்பா! பெருந்துறை ரோட்டுல 'Reliance Communications' எங்கப்பா இருக்கு?"

சாப்பிட்டுக் கொண்டிருந்த என் நண்பன் கேட்டான்.

"என்னத்திற்கு?"

"என்னோட இன்டர்நெட் கனெக்ஷன க்ளோஸ் பண்ணனும்."

"அந்த ரோட்லதான் இருக்குன்னு யார் சொன்னது?"

"போன் பண்ணிக் கேட்டேன். சொன்னாங்க!"

"போன் நம்பர் என்ன?"

நண்பனின் அம்மா வைத்திருந்த கொள்ளுத் துவையலில் காரணமின்றி ஊடுருவி இருந்த மல்லி விதைகளை, சலிப்புடன் கூடிய பொறுப்புடன், ஒவ்வொன்றாய் பொறுக்கித் தட்டின் ஓரமாய் வைத்துக்கொண்டிருந்த என் கவனத்தை இழுத்தது இந்தக் கேள்வி.

மேம்போக்காய்ப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றினாலும், இந்தக் கேள்வியின் நோக்கம் புரியவில்லை. நண்பன் தேடும் விடைக்கு எந்த விதத்திலும் உதவக்கூடிய கேள்வியாக இல்லையே இது. இதைக் கேட்டவரின் நோக்கம்தான் என்ன? தன் மகனின் ஞாபகத் திறனுக்கு வைக்கப்பட்ட சோதனையா? தனக்குத் தெரியவில்லை என்பதை மறைக்கும் விதமாய் விழுந்த காரணமற்ற வினாவா? - என்று என் ஊகங்களின் எல்லைகளை விரிப்பதற்கு முன், சில பொழுதுகளே என் மூளை ஓட்டிய காட்சி தங்களின் பார்வைக்கும்...

காட்சி 2:
கல்லூரி வளாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த STD பூத் வரிசையில் நான்.

நினைத்த பொழுதில் பேச கைபேசியோ, நெருங்கியவர்களின் தொலைபேசி எண்களைத் துண்டுச் சீட்டிலாவது குறித்து வைக்கும் பொறுப்புணர்வோ என்னிடம் இல்லாத காலம். எனது முறை வந்தது.

அவசரமாய் அப்பாவிடம் பேச வேண்டும். இந்த நேரத்தில் அலுவலகத்தில் இருப்பார். நம்பர்? மூளையே மூலதனம் என்று, முன்னே அதன் மூலையிலே போட்டு வைத்திருந்த நம்பர்களைத் துழாவினேன்.

STD இலக்கங்களும், அங்கிரண்டு இங்கிரண்டு என நான்கு இலக்கங்களும் பொறுக்கி எடுத்துவிட்டேன். 0451-42_ _01. காலி இடங்களில் '67' வருமா? '76' வருமா? முட்டிக்கொண்டு நின்றேன். பின்னாலிருந்த வரிசை முறைத்துக் கொண்டு நின்றது. கணிதம் கற்றுக்கொடுத்த "combination"-ஏ சரணம்; 'இரண்டில்' ஒன்று பார்த்துவிடுவோம் என்று பொத்தான்களை அமுக்கினேன்.

"ஹலோ! யார் பேசறது?" - எதிர்முனை.

"ஹலோ! இது Fire Service-ங்களா?"

"யாருய்யா நீ? வம்பு பண்றியா? Fire Service-க்கு 101-ன்னு கூடவா தெரியாது?"

"இல்லைங்க என்.."

"Wrong number. மடச் சாம்பிராணிங்க! கழுத்தறுக்கராணுக!"

'டொக்'...

மறுபடியும் காட்சி 1:

"நான் call center-க்கு போன் பண்ணித் தெரிஞ்சுக்கிட்டேன்பா. அந்தக் கடை நம்பர் தெரியல!"
-என்று அமைதியாகப் பதில் சொன்னான் தொலைபேசித் துறையில் வேலை செய்து ஒய்வு பெற்றவரின் மகனான எனது நண்பன்.

அந்தப் பதிலுக்கும் அதற்குமுன் கேட்கப்பட்ட 'அர்த்தமுள்ள' கேள்விக்குமாய்ச் சேர்த்து, தீயணைப்புத் துறையில் வேலை செய்து ஒய்வு பெற்றவரின் மகனான நான், ஒரு புன்னகையை உதிர்த்தேன்; மல்லி விதைகளுக்கும் ஒரு காரணம் இருக்கக்கூடும்!

(எழுத்தும் ஆக்கமும் - சுரேஷ்)

image courtesy: http://www.kamyabology.com/

Monday, November 21, 2011

சிலை வழி மேவும் உளி ஒலி தேடி - I

"களங்களும் அதிர
களிறுகள் பிளிற..
சோழம் அழைத்துப் போவாயோ.."

ஆயிரத்தில் ஒருவன் திரையிசைப்பாடலின் வரிகள் இவை. பாலா மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல் இது. பாடலின் தாக்கத்தில் முடிவு செய்திருக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் அவர் எங்களைப் பெரம்பலூருக்கு அழைத்தார். அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம் அழைத்துப் போவதாகக் கூறினார்.

தட்சிணாமூர்த்தி அவர்கள் எழுதிய "தமிழர் நாகரிகமும் பண்பாடும்" என்ற புத்தகத்தின் பக்கங்கள் கண் முன் விரிந்தன. புத்தகப் பக்கத்தில் படிப்பதை விட, அப்பெட்டகங்களின் பக்கத்திலேயே படிக்கலாம் என்ற ஆவல் எழுந்தது. அத்திட்டத்தை அப்படியே தாரசுரம், தஞ்சை என நீட்டித்தான் சுரேஷ்.

-----

பெரம்பலூரிலிருந்து காலை 6.30க்கு கிளம்பி, அரியலூர், ஜெயங்கொண்டம் வழியே கங்கை கொண்ட சோழபுரம்; அங்கிருந்து அணைக்கரை வழியே கும்பகோணம் தாராசுரம்; அங்கிருந்து தஞ்சை பெரிய கோயில்; மாலை 6.30க்கு தஞ்சையில் இருந்து ஈரோட்டிற்குப் புகை வண்டி - இதுவே எங்கள் திட்டம். பன்னிரண்டு மணி நேரத்தில், பல நூற்றாண்டுப் பயணம். இது வழிபாட்டுப் பயணம் அல்ல, பண்பாட்டுப் பயணம் என்பதைத் தீர்மானித்துக்கொண்டோம்.

-----

தொடரும் முன் ஒரு மைக்ரோ-மினி வரலாறு: முதன்முதலில் கற்கள் கொண்டு கோயில்களைக் கட்டுவித்தவர்கள் பல்லவர்கள். மாமல்லபுரம் தொடக்க நிலை. இதற்கு முன் சுதைமண்ணிலும் மரத்திலும் கோயில்கள் இருந்ததை அறிகிறோம். மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலின் பரிணாம வளர்ச்சியே இடைக்காலச் சோழர்களும், பிற்காலச் சோழர்களும் கட்டுவித்தவை. இவற்றின் விமான வடிவு பௌத்த மதத்தின் தாக்கத்தில் ஏற்பட்டவை என்று கூறுகின்றனர்.

-----

கங்கை கொண்ட சோழபுரம்

ஜெயங்கொண்டத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையில் 40 நிமிட பேருந்துப் பயணத்தின் பின், சாலை மருங்கில் ஓங்கி நின்று, நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது கங்கை கொண்ட சோழபுரம் கோயில். ராஜேந்திர சோழன் தந்தையை விட எட்டடி பாய நினைத்து, ஏதோ காரணத்தால் தன் முயற்சியைக் குறைத்துக் கொண்டது போன்று தோன்றும் விமான வடிவம். சூரியனை மேல் நோக்கிச் சென்று தொடுவதை விட, கிழக்கு நோக்கிச் சென்று தொட நினைத்து, கிழக்காசியாவைக் கைப்பற்றச் சென்று விட்டான் போலும்.



தஞ்சை கோபுரத்தின் புறத்தோற்றத்தில் நேர்கோடுகள் அமைய, இங்கு வளைகோடுகள் அமைகின்றன.







விமானத்தின் ஒரு மூலையில்:




யாளிகளும் அவற்றைச் செலுத்துவோரும்:



மதில் சுவரில் நந்திகள் - சோழர் கட்டிடக்கலையின் அடையாளம்:



பெரிய உருவம் கொண்ட வாயில் காப்பாளர்கள் - சோழர் கட்டிடக்கலையின் அடையாளம்:




இக்கோயிலின் மேல் நம்மவர் வைத்திருக்கும் மதிப்பு:




வெற்றிலைக் கறைகள்



-----

தஞ்சையைப் போன்றே இங்கும் பிரகதீசுவரரே மூலவர். கோயிலின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இங்குள்ள நவக்கிரக மேடையைச் சுற்றி வர முடியாது. இதன் அமைப்பு மற்ற கோயில்களை விட மாறுபட்டுள்ளது. சூரிய தேவன் எழு குதிரைகள் கொண்ட ரதத்தைச் செலுத்தும் வகையில் அமைக்கப்பெற்றுள்ளார். இருட்டின் காரணமாகப் பிற கோள்களின் அமைப்பைச் சரியாக ஆராய முடியவில்லை.

-----

நாங்கள் சென்றிருந்த போது சில அயல் நாட்டவரும், புது மணத் தம்பதிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்திருந்தனர்.

-----

வெளியேறும் போது பிச்சைக்காரர்கள் கோயில் வாசலில் கையேந்தி நின்றனர். பாடலை முணுமுணுக்கத் தொடங்கினார் பாலா....

"சிலை வழி மேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்..

ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்..

புலிக்கொடி பொறித்த
சோழ மாந்தர்கள்
எலிக்கறி பொரிப்பதுவோ…

காற்றைக் குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ…"
(தாராசுரம் நோக்கிப் பயணம் தொடரும்...)

Monday, July 18, 2011

வணக்கம் வெண்பா

வெண்பா எழுதிப்பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆவல். இந்த வாரம் வரிந்து கட்டிக்கொண்டு விதிகளை மனப்பாடம் செய்து எழுதியும் விட்டேன். கற்பனைக்கு வினைக்கெட (மெனக்கட) வேண்டாம் என்று, சில மேற்கத்தியப் பாடல் வரிகளை மொழிபெயர்த்துள்ளேன். இவற்றின் ஆங்கில மூலத்தைப் பாடியவர்கள்:
MJ - Michael Jackson; CD - Celine Dion; 'N - 'NSync; BA - Bryan Adams;
BD - Bob Dylon; MLTR -MLTR; BZ - Boy Zone

இக்கலைஞர்கள் என்னை மன்னிப்பார்களாக! இனி உங்கள் பாடு...

1.
I'm starting with the man in the mirror
I am asking him to change his ways
-MJ

முன்நிற்கும் பிம்பத்தின் மெய்யோன் திருந்திடப்
பின்நிற்கும் நன்நெறியில் பார்

(பார் - உலகம்)

2.
I know that I can't describe
What I'm feeling inside
..
I guess I live with the fear
This could all disappear
If I try to put it in words
-CD

நன்மொழி வேண்டிமுன் கெஞ்சினம் சொல்லின்பின்
கைத்தவறு மென்றஞ் சினம்

3.
I could build you a bridge that spans the oceanwide
But the greatest gift I give you would be to stand by your side
-CD

அருங்கடல் நீண்டளக்கும் பாலந் தரலின்
பெரும்பரி சென்துணையு னக்கு

(பெரும்பரிசு, என் துணை)

4.
Here I am - This is me
There is nowhere else on earth I'd rather be
-BA

இவ்விடம் வந்தேன் இவணாவேன் உன்நிழல்
நீங்கி இனிப்போவா னேன்

5.
When you speak the angels all sing
This is the kind of magic you bring
-MJ

அன்பேஉன் மாயநாவைச் சற்றசை - கேட்டு
மகிழலாம் தேவதை இசை

6.
When I 'm all alone with the stars above
You are the one I love
-MLTR

விண்மீன் துணைத்தும் தனித்தேன் உனையே
நினைந்தேநான் காதலித் தேன்

7.
Love me for a reason
Let the reason be love
-BZ

காரணங் கொண்டெனைக் காதல் புரிகஅக்
காரணமுங் காதலே கொள்க

8.
That he not busy being born
Is busy dying
-BD

பிறத்தல் அவசரத்தில் இன்னும் சிலரும்
இறத்தல் வழியில் பிறரும்

9.
Steal a little and they throw you in jail
Steal a lot and they make you king
-BD

சிறுபொருள் கள்வன் சிறையில் அரும்பொருள்
கள்வன் அரியணை யில்

10.
When I look into your eyes
I know that it's true
God must have spent...
A little more time
On you...
-'N

நன்முகத்தாள் மெய்யுரைக் கண்காட்டும் வானுரை
நான்முகத்தான் மெய்வருத் தல்

(தளை எங்கேனும் தட்டியிருப்பின் என் தலை தட்டுக!!)

Saturday, December 18, 2010

அவசரம்



(picture courtesty - please read the link at end)

சிறுநீர் கழிக்கும் முன்
கண்ணில் பட்டது -
கழிவு நீர்ப்பாதையில் சிக்கிய பூச்சி

ஒன்றுக்குப் போகும் அவசரம் எனக்கு
உயிரே போகும் அவசரம் பூச்சிக்கு

http://headinjurytheater.blogspot.com/2006/06/urinal-fun-in-amsterdam.html

Sunday, December 5, 2010

அழகு

உலகப் பானைக்கு
அவள்
ஒற்றைச் சோறு

Saturday, October 9, 2010

கடவுச்சொல் ஏழு

1.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப
பொருளிலாச் சொற்றொடரென்ப
இம்மூன்றும் கடவுச்சொல் விதி
--
2.
மறக்காதே
எவர்க்கும் கொடுக்காதே
எங்கேனும் குறிக்காதே
குறித்தாலும் தொலைக்காதே;
ஒருவரின் ரகசியம்
கடவுச் சொல்
வேறெவரும் அறிவது
நன்மை இல்
--
3.
தன்மொழியோ
பொன்மொழியோ
அனைத்துக்கும் முன்மொழியோ
மிக விரும்பும் செம்மொழியோ -
எத்தகு அகராதியிலும் -
இதுவென்றும் அதுவென்றும்
எவர்க்கும் விளங்காச் சொல்
கடவுச் சொல்
--
4.
கவிதைக்கும் கனவுக்கும்
காதலிக்கும் கடவுளுக்கும்
நாய்க்கும் நட்புக்கும்
அறிவுக்கும் அண்மைக்கும்
சோகத்துக்கும் சோம்பலுக்கும்
உரித்தாகும் கடவுச் சொல்
உருவாகும் நிமிடத்தில்
--
5.
சிறிதென்று கொள்க
சில திங்களென்று கொள்க;
சினேகிதர்கள் ஊடல் போலும்
கடவுச்சொல் வாழ்நாள்
--
6.
கணினிக்கோ
பிற கருவிக்கோ

சேமிப்புத் தொகைக்கோ
பிற சேவைக்கணக்குக்கோ

எவற்றின் கடவுச்சொல் மீதும்
காமுறுவர் கயவர்
--
7.
சிதம்பர ரகசியமே
சிற்றம்பலம்
பேணாக் கடவுச்சொல்லோ
பேரம்பலம்

Sunday, September 26, 2010

ஒரு மழைப்பொழுதில் (On a rainy day)



கால் சட்டையை அரைக்காலாக்கிக்
கையைக் குடையாக்கிக்
கொஞ்சம் உலர்வாகவும்
நிறைய ஈரமாகவும்
அறைக்கு வந்து சேர்ந்தேன்;

சலனமின்றி,
என் வருகைக்காகக் காத்திருந்தது
ஜன்னலருகே வைத்துச் சென்ற
சோப்பு

Folding pants over the knees
Holding hands over the head
Less dry and more wet
Opened the doors to my room

There lied the detergent soap
Near the window, with bubbles of hope
Unperturbed,calm and cool
Waiting for me to save it from doom

Picture Courtesy: http://www.flickr.com/photos/26309540@N08/2637798827

Sunday, July 18, 2010

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

குளிக்கச்செல்லும் முன் அன்று உடுத்திக்கொள்ள ஆடைகளை ஒவ்வொரு பையாகத்தேடி, கடைசியில் வெகு நாட்கள் திறந்திடாத ஒரு பையைத்திறந்து, அருவருப்பில் தூக்கி எறிந்தேன். காரணம் பைக்குள் மீசை முறுக்கிக்கொண்டிருந்த கரப்பான் பூச்சி. சில நொடிகள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பையை மீண்டும் எடுத்து எப்படியோ அதைப் பையிலிருந்து வெளியேற்றினேன்.குளியலறைக்குள் சென்றால் அங்கும் இருந்தது ஒரு கரப்பான். அறைக்குள் கரப்பான் இருப்பது உறுத்திக்கொண்டே இருக்க, குளியல் மீதான கவனம் குறைவாகவும், கரப்பான் மீதான கவனம் அதிகமாகவும் கொண்டு "சனி" நீராடினேன்.

கரப்பான், தேள், பூரான், மூட்டைப்பூச்சிகள் போன்றவற்றுடன், சிறு வயதிலிருந்து கொண்ட அனுபவங்களின் நினைவுகளில் நனைந்து வெளியேறிய போது, உடலெல்லாம் கால்கள் ஊர்வது போன்ற உணர்வு மேலிட்டது.

ஜன்னலருகில் பக் பக்கிய புறா, என்றும் ஆனந்தம் தருவது, இன்று ஏனொ வெறுப்பை ஏற்படுத்தியது."காக்கை குருவி எங்கள் ஜாதி", என்று பாரதியை நினைத்துக் கொஞ்சம் சாந்தப்பட்டுக்கொண்டேன். சிலந்திகள் மீது கல்லூரியில் காட்டிய கரிசனம் நினைவுக்கு வந்து மேற்கூரையைப் பார்த்ததில் பகீர் என்றது. ஒரு குளவிக் கூடு இருந்தது. அதில் குளவியேதும் இருக்கக்கூடாது என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன் (கடவுளோ, காப்பர் சல்பேட்டோ, எதன் மீதாவது நம்பிக்கை வைத்திருத்தல், இது போன்ற வேளைகளிலாவது உதவும்).

என் எல்லைக்குள் அன்று பலரும் அத்து மீறுவதாய்ப் பட்டது. அவ்வெண்ணம் தோன்றி ஓய்ந்த மறுகணமே, எது என் எல்லை என்று எங்ஙனம் தீர்மானமாயிற்று என்று எண்ணலானேன். கரப்பான்களை இதற்கு முன்னும் என்னறையில் கண்டிருக்கிறேன். அவை வாசம் செய்த அறைக்கு நான் வந்தேனா, அல்லது நான் வாசம் செய்யும் அறைக்கு அவை வந்தனவா என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. எல்லையை என் அறை என்று வைத்துக்கொள்ளாமல், இந்த விடுதியோ, இந்த நகரமோ என்று வைத்துக் கொண்டால், பெரும்பாலும், இந்தக் கரப்பானின் முன்னோர்கள்தான் எனக்கு முன் குடியேறியவர்களாக இருக்க வேண்டும். எனில், நான் அல்லவா, அவற்றின் எல்லைக்குள் அத்து மீறியவன்? குளவிக்கும், புறாவிற்கும் கூட இது பொருந்தும்.

உருவத்திலோ, புலனறிவிலோ பெரியவன் என்கிற ஆணவத்தில் அல்லவா இது என் எல்லை ஆனது? எவை, எங்கு, எப்படி இருக்க வேண்டும், எப்போது என்ன நடக்க வேண்டும் என்பதை ஓரளவுக்குத்தீர்மானிக்கும் வலிமை உள்ளதால், மனிதன் இந்தப் புவிக்கு உரிமை கொண்டாடுவதுதான், மக்களாட்சியா? இப்படிச் செய்வது தான் முன்னேற்றம் என்று தீர்மானித்துக்கொண்டு, பழங்குடி மக்களை அவர்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு அங்கு ரிசார்ட்களும், ஏவுகனைத்தளங்களும் அமைப்பத்தற்கு ஈடான செயலாகும், குளவிக்கூட்டைக் கலைப்பதும், சிலந்தி வலையைக் கிழிப்பதும்.

தலையையும் எண்ணங்களையும் துவட்டியவாறே கண்ணாடி முன் நிற்க, பின்னால் சுவரில் தெரிந்தது கரப்பான். அதைக் கொல்வதா, வெளியேற்றுவதா, அப்படியே விடுவதா என்று மூளை முப்பது வகையாக யோசித்தது. முப்பதும், ' நான்' என்னும் அகம்-பாவிதான்!

அறையை விட்டு அகற்றவே உரிமை இல்லாத நான் எப்படி, அவ்வுயிரை உலகை விட்டு அகற்றுவது என்று தெளிவடைந்தவனாக, இருப்பினும் உயர்திணைத் திமிருடன், கொஞ்சம் அன்பாக அதைக் காகிதத்தில் பிடித்து ஜன்னல் வழியே எறிந்தேன். அது புறாவிற்கு உணவாகலாம், உரிமை கோரி மீண்டும் என் அறை வரலாம்....வந்தால் மறுபடி விரட்டுவதில்லை என்று தீர்மானித்துக்கொண்டேன்.

படியிறங்கிச் சாலையில் நடக்கையில், சுவரொட்டியில் இருந்த பாரதியாரின் கண்ணைப் பார்க்க வெட்கமாய் இருந்தது.

Sunday, May 23, 2010

கற்றபின் நிற்க அதற்குத் தக

அள்ளி வந்த மணலைக் கரை சேர்த்து மீண்டும் வளம் தேடிக் கடல் திரும்பியது அலை. அலைகளை எண்ணிக்கொண்டிருந்தான் சுரேன்; ஏதேதோ பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன் நான். இருவரின் கவனத்தையும் கலைத்தது "நெஞ்சில்...ஜில்..ஜில்..ஜில்..ஜில்". கார்த்தியிடமிருந்து அழைப்பு.

"எந்த இடத்துல இருக்கீங்க?"

"ரொம்ப கூட்டம் இல்ல...கண்டுபிடிக்கறது ஈசிதான், வா"

பத்து நிமிடங்களில் கார்த்தியும் வந்து சேர்ந்தான்.

"சௌக்கியமா?"

"மிகவும்" - சுரேன்

"ம்..ம்.." - நான்

"இன்னைக்கு நிலா அருமையா இருக்கில்ல?"

"ம்..ம்.." - நான்

"என்னடா ஆச்சு இவனுக்கு?, எல்லாத்துக்கும் ஒரு எழுத்துல பதில் சொல்றான்"

"அதாவது சொல்றானே..இவ்வளவு நேரம் மணல்ல ஜாமெட்ரி தான் போட்டுட்டிருந்தான்"

"ஏண்டா.... நாமெல்லாம் இஞினியரிங் படிச்சு என்னடா பிரயோஜ்னம்" - நான்

"டேய், பஜ்ஜி சாப்பிடலாமா?" - சுரேன்

"நான் சீரியசா பேசிட்டிருக்கேன்"

"பஜ்ஜி சாப்பிட்டா பெருசா காமெடியெல்லாம் வராதுடா, அப்பையும் சீரியசா பேசலாம். நான் 3 மணிக்கு அப்புறம் எதுவுமே சாப்பிடல, இப்போ பஜ்ஜி சாப்பிடாட்டி, என் நிலம சீரியஸ் ஆகிடும். நீங்க ரெண்டு பேரும், திரைக்கதைய ஆரம்பிங்க, நான் வந்து கதை வசனத்துல சேர்ந்துக்கறேன்"

"என்னடா திடீர்னு ஞானத்தேடல்?" - கார்த்தி

"இல்லடா, எவ்வளவோ பேர்க்குக் கனவா இருக்கற ஒரு காலேஜ்'ல படிக்கிற சான்ஸ் கெடச்சு, கவர்மெண்ட் செலவுலயே புத்தகம் வாங்கி, பீஸ் கட்டி, கடசில ஒரு தனியார் கம்பெனில வேலை செய்யறோம், இதுனால நம்ம மக்களுக்கு என்ன லாபம்"

"தெருத்தெருவா வேலை இல்லாம அலையாம, கடன் சொல்லாம இப்படி பஜ்ஜி சாப்பிடறோம் பாத்தியா, அதுவே ஒரு லாபம் தான். கார்த்தி உனக்கு வெங்காயமா, மிளகாயா?"

"வாழ்க்கை ஒரு பர்பஸ் இல்லாம போற மாதிரி இருக்குடா"

"அய்யயோ, வழக்கமா பீச்சுக்கு வந்தா கவிதை தேடுவான்..இன்னைக்குப் பர்பஸ் தேடி வந்திருக்கான் போலிருக்கே"

"ஏன் உனக்கு அப்படித்தோணுது?" - கார்த்தி

"எந்தக் கட்சி ஆட்சில இருந்தாலும் மக்கள் பசிலயும் நோய்கள்ளயும் படாதபாடு படறாங்க. குழந்தைங்கள படிக்க வைக்க முடியாம கஷ்டப்படறாங்க. இதுக்கெல்லாம் நாம என்ன செய்யறோம்?"

"நான் மாசாமாசம் டேக்ஸ் கட்றேன், சிக்னள்ல சிகப்பு விழுந்தோடனே வண்டிய நிறுத்திடறேன், பஸ்ல டிக்கெட் எடுக்கறேன், ஆகஸ்ட் 15 அன்னைக்குக் கொடி குத்திக்கிறேன்" - சுரேன்

"சரி நாம எல்லாரும் சரியா டேக்ஸ் கட்றோம்னு வை, அந்தப் பணத்த அதிகாரிகள் சரியா பயன்படுத்தறாங்கன்றியா?

"மூணு பேரும், அன்னியன் ஆகலான்றியா?" - சுரேன்

"IPS ஆகலாம். IAS ஆகலாம்" - கார்த்தி

"அப்பயும் நமக்கு முழு அதிகாரம் இருக்காதுடா. எல்லாத்துலயும் அரசியல் தலையீடு இருக்கும்"

"இப்படியே சாக்கு சொல்லிட்டிருந்தா, கண்டிப்பா நம்மளால ஒரு சின்னத்தெருவ கூட சுத்தம் செய்ய முடியாது" - கார்த்தி

"நீ ஏண்டா பெரிய லெவெல்ல யோசிக்கிற. முதல்ல நம்ம சக்திக்குள்ள என்ன முடியுதோ அத செய்வோம்" - சுரேன்

"......"

"அங்கப் பாரு, அந்தத்தெரு லைட் எரியல. உன் கிட்ட போன் இருக்கா? என் கிட்ட EB நம்பர் இருக்கு. உனக்கு ஒரு 10 நிமிஷ நேரமும், 2 ரூபா பேலன்ஸும் இருந்தா, அந்தத்தெரு விளக்க எரிய வைக்கலாம்" - சுரேன்

கொஞ்சம் ஆறுதல் அடைந்தவனாக எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அலை கொணர்ந்த மணலில் கொஞ்சம் காலணியில் ஒட்டிக்கொண்டு உடன் வந்தது.

கார்த்தி - இப்போது - IAS நேர்முகத்தேர்விற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறான்.
சுரேன் - இப்போது - சில மில்லியன் மரங்களை இந்தியாவெங்கும் நடும் திட்டத்தில் தீவிர பங்காற்றுகிறான்.
நான் - இன்னும் வாழ்க்கையின் பர்பஸைத்தேடிக்கொண்டிருக்கிறேன்..

Sunday, April 11, 2010

சென்னை நேசனின் கோவை வாசம் - I




எட்டடி சாலையில் எண்ணற்ற சக்கரங்கள்,
முன் செல்லும் வாகனத்தை
முந்திச் செல்ல எத்தனிக்கும்;
எதிர் படும் வாகனத்தால்
பிள்ளயைப் போல்
பின் பதுங்கும்
--
சாலை நெரிசலில்
மெல்ல நகர்கின்றன வாகனங்கள் -
கோவையும் மா'நகர்'
--
குறளினும் குறுகிய சாலைகள்
உலகத்தமிழ் மாநாடு தயவில்
அதிகாரம் பெறுகின்றன;
வழிந்தோடும் பொருட்பால்
--
cross cut-ல் ஆரம்பித்து
சத்தி road வழி சென்று
100 feet வழி மீண்டும் cross cut-ல் முடிகிறது
என் பித்தகாரஸ் தியரம்
--
பொள்ளாச்சி- வால் பாறை- டாப் ஸ்லிப்- ஊட்டி
தருகின்றன
வெளியிலிருந்து ஆதரவு
--
சுவையூற்றாம், கற்கண்டாம்
இச்சிறு நாவில் இன்னும் படவில்லை
சிறுவானி
--
பெயரிலிருந்தாலும்
கோவைத்தமிழ் பேச்சிலில்லை
'வை'தல்
--
கோட்டம் இல்லை spencer இல்லை பீச் இல்லை
எங்கு சந்திப்பர் காதலர்கள்?
--
திங்கள் தெரியும் செவ்வாய் ஒளியும்
தூரத்து காட்சி மயக்கம்
பெயர் தெரியா மலைத்தொடர்
--
அண்ணன், அக்கா, தம்பி,
சித்தப்பா, பெரியம்மா
கோவை நகர் நடத்துனர்க்கு
எல்லோருமே உறவு

Sunday, April 4, 2010

காதலாகிக் கசிந்துருகி

அலுவலகப் பேருந்தில், வைரமுத்து பற்றி ஒருவர் சிலாகித்துக் கொண்டிருக்க, முன் தினம் நண்பனின் தொலை பேசி அழைப்பு நினைவுக்கு வந்தது - "என்னடா இன்னும் கவிதை எல்லாம் எழுதுறியா?". கவிதை எழுத கோபம் வேணும், சோகம் வேணும், குறைந்த பட்சம் காதலாவது வேணும் என்று நினைத்துக் கொண்டேன். சரி சும்மா முயற்சி செய்யலாம் என்று முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சுமாரான பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். ஒரு மெல்லிய காற்று வீச, கலைந்த கூந்தலைச் சரி செய்து கொண்டாள்.

"கலைந்த சிகையின்
அழகுக்குக் காரணம் -
காற்றா காதலா?"

என்று விறு விறுவென நண்பனுக்கு SMS அனுப்பினேன். "அட! இது work out ஆகும் போலிருக்கே!!" என்று உற்சாகம் அடைந்தேன்.

--

பேருந்தில் யார் யார் பயணிக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்வதற்காக, ஒரு ஏட்டில் அனைவரும் பெயர் எழுதி கையொப்பம் இடுவோம். அவள் பெயரை அறிந்து கொள்ளும் ஆவலில், மறு நாளும் அவள் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டேன். கையொப்பம் இட்டுப் பின்னால் என் கையில் கொடுக்க, பெயரைப் பார்த்தேன் - "தென்றல்"!

"உன் பெயரை எழுதியதும்
பதிவேட்டின் பக்கங்கள்
படபடத்தன"

--

இப்படியாக ஒரு வாரம் SMS-ல் கவிதைகள் பறந்து கொண்டிருக்க, அன்று project lead எல்லோரையும் ஒரு அறைக்கு அழைத்தார். நம்ம teamல புதுசா கொஞ்சம் பேர் சேரப்போறாங்க. அவங்கள அறிமுகம் செய்யத்தான் இந்த meeting என்றார். எங்களைக் காக்கச் சொல்லிவிட்டு, வெளியே சென்று மூவரை அழைத்து வந்தார்; எனக்கு இரத்தம் தலைக்கேறுவது தெரிந்தது..மூவரில் ஒருவர் - தென்றல். "What are the chances!!" என்று ஆச்சிரியம் அடைந்தேன். ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொள்ள, என்னைப்பார்த்து ஒரு மில்லி மீட்டர் அதிகம் சிரித்தாள். இருக்கைக்குச் சென்றதும், விசைப்பலகையில் என் படபடப்பை டைப்படித்தேன்.

--

ஓரிரு நாட்களில் பணி நிமித்தமாக பேசிக்கொண்டோம் - அவள் அதிகமாகவும், நான் சிக்கனமாகவும். "நீங்க ரொம்ப 'reserved'-ஆ இருக்கீங்க" என்றாள். நான் சிரித்தேன் - மீண்டும் சிக்கனமாக.

"இதயத்தை முன்பதிவு செய்தவள் கூறினாள் -
' நீங்க ரொம்ப reserved'"

--

ஒரு நாள் காலை அவளிடமிருந்து அழைப்பு வந்தது.

"அவள் அழைக்கும் போது செல்கின்றன
vibration modeக்கு
என் செல்கள் அனைத்தும்"

' நான் வர ஒரு 5 மினிட்ஸ் ஆகும், டிரைவர கொஞ்சம் வெய்ட் பண்ணச் சொல்றீங்களா?' ' நிறையவே வெய்ட் பண்ணச் சொல்றேங்க' என்று வழிந்தேன். பேருந்து வரும் முன்னரே வந்து சேர்ந்தாள்.

"உங்க caller tone நல்லாருக்கு - என்ன படம்?" என்றாள்.

"Michael Learns to Rock ஆல்பத்துல ஒரு பாட்டு".

"ஓ! ஆங்கிலப் பாடல்கள் தான் கேப்பீங்களோ".

"இல்லைங்க, நீங்க தமிழ் பேசினாலும் கேப்பேன்".

"அட! உங்கள reservedனு தப்பா எடை போட்டுட்டேன்", என்று சிரித்தாள்.

--

ஒரு நாள் team-ல் அனைவரும் இரவு உணவிற்கு வெளியே சென்றோம். வெகு நேரம் ஆகியும் அவளைக்காணோம்.

"சைக்கிளுக்கு எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் காதலுக்கும் -
காத்திருப்பு"

என்று நண்பனுக்கு SMS அனுப்பினேன்.

கொஞ்சம் தாமதமாய் வந்தவள் என்னருகில் அமர்ந்திருந்த அரவிந்தை அடுத்த இருக்கைக்கு மாறச்சொல்லிவிட்டு என்னருகில் அமர்ந்து கொண்டாள். எல்லோரும் என்னை அர்த்தமாய்ப் பார்க்க, " நீங்க மட்டும் தான் நம்ம teamல veg..birds of same feather flock together" என்று சிரித்தாள். "அவங்க plateல இருக்கறது கூட birds of same feather தான்" என்று சமாளித்தாலும் எனக்கு உணவு இறங்கவில்லை. அன்றிரவு உறங்கவில்லை.

--
தேனீர் இடைவேளையில் ஒரு நாள், " நீங்க 'தண்ணீர் தேசம்' படிச்சிட்டிருந்தீங்களே,முடிச்சிட்டீங்களா? எனக்குத்தறீங்களா please?" என்றாள். அவளுக்கு வைரமுத்து பிடிக்கும் என்றும், புத்தகங்கள் படிப்பாள் என்றும் அன்று தெரிந்து கொண்டேன்.

--

ஒரு வேளை எல்லாம் காரணமாகத்தான் நடக்கிறதா? இவள் தான் என்னவளா? இவளுக்கு நான் ஏற்ற துணையா? என் குடும்பத்தில் இவள் மகிழ்ச்சியாய் இருப்பாளா? திருமணம் பற்றி முடிவு செய்யும் நிலையில் நான் இருக்கிறேனா?" என்றெல்லாம் ஒரு மாதத்திற்கு மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தேன். கவிதைக்காய்க் காதலிக்கப் போய் இப்படி மூளையைப் பிராண்ட வேண்டியிருக்கிறதே என்று நொந்து போனேன். முடிவெடுக்கும் தைரியம் இல்லாமல், அவளிடமிருந்து விலக ஆரம்பித்தேன்.

"அறுத்து விட்டதும்
அதிகம் துடித்தது - காதல் -
பல்லியின் வால் போல"

என்று சென்றது நண்பனுக்கு SMS.

--
climax 2(for international audience):
சென்ற வாரம் அவளிடமிருந்து email வந்திருந்தது - அவள் திருமண வாழ்க்கை மகிழ்வாய் இருப்பதாகவும், தான் விரும்பியது போலிருப்பதாகவும். அதோடு, என்னுடனான நட்பு வினோதமானது என்றும் - நாங்கள் தொடர்பற்று போனதில் வறுத்தம் அடைவதாகவும்.

பல்லியின் வால் கடைசியாய் ஒரு முறை துடித்தது.

--
climax 1(for bollywood audience):
பின்னர் கதையில் சில twistகள் வந்து, தென்றலே என் வாழ்க்கைத் துணையானாள். நேற்று திடீரென கேட்டாள் "ஏன் நீ இப்போலாம் கவிதை எழுதுறதில்ல"; "கவிதை எழுத கோபம் வேணும், சோகம் வேணும், குறைந்த பட்சம் காதல் தோல்வியாவது வேணும்"; " நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதே காதல் தோல்விதானே" என்று சிரித்தாள் - என் மனைவியாகிய தேவதை.

--
(Attempted a fiction, per request from Arvindh. Because of Delhi-6 effect added two climax)

Sunday, August 16, 2009

வ(வா)சிக்காமல் விட்ட பக்கங்கள்


அந்தக் காலாண்டிற்கும்
'சிறந்த பணியாளர்' விருது வாங்கி வந்த இரவில்,
அறையில் இரைந்து கிடந்தன
காது மடிக்கப்பட்ட பல புத்தகங்கள்.


Sunday, June 14, 2009

Sweet Nothings!!


கல்லூரி விடுதியில் தங்கிப்படித்த காலங்கள் பசுமை நினைவுகள். நான்கு அல்லது ஐந்து மணி நேரங்களுக்கு மேல் வகுப்பு கிடையாது. இரண்டு மாதங்களில் ஐந்து நாட்களுக்கு மேல் தேர்வு கிடையாது. வாரத்தில் இரண்டு நாட்கள் செய்முறைப்பயிற்சி வகுப்புகள் (PRACTICAL) இருக்கும். அதற்கு முன் தினம் மட்டும் கொஞ்சம் மூளையை வருத்த வேண்டியிருக்கும் (பயிற்சி வகுப்பிற்கு முன்னர் மூளையைப் பயன்படுத்தும் அளவிற்குக்கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை சொன்ன பின்னரே உள்ளே அனுமதி கிடைக்கும்). சனி, ஞாயிறுகளில் வகுப்பு எப்போதும் கிடையாது. அப்பா கொடுத்த ஐனூறையோ ஆயிரத்தையோ செலவு செய்த பிறகு, மீதம் இருந்தது நொடி நொடியாய் நேரம் மட்டும் தான்.

தினமும் பத்து மணிக்கு உறங்கிவிடும் என் போன்ற நல்ல பிள்ளைகள் கூட, வார இறுதி 'மொக்கை'களில் கலந்து கொண்டு கேள்விச்செல்வத்தில் வள்ளுவர் மெச்சும் பிள்ளைகளாய் விடிய விடிய திளைத்திருப்போம். சிம்ரனில் ஆரம்பிக்கும் பேச்சு மெல்ல சித்ராவின் குரலில் கொஞ்சம் லயித்து விட்டு, வைரமுத்துவை கொஞ்சம் வம்பிழுத்து, சிலப்பதிகாரத்தை மேய்ந்து விட்ட பின்னர் ஒரு நண்பன் ஆரம்பிப்பான் - " நான் தூங்கப்போறேன்டா...". பின்னர் கதவருகில் நின்றவாரே, கண்ணகி சிலையைப் பற்றிய விவாதத்தில் கலந்து கொள்வான். அப்படியே சிலிக்கன் சிப்புகள் பற்றி யாராவது புத்திசாலி நண்பன் அரை மணி நேரம் பேச மற்றவர்கள் கொட்டாவி மூலம் நேர்மையான கருத்தைத் தெரிவிப்போம். ஒவ்வொருவராகக் கூட்டதில் இருந்து கலைய, சில கோட்டான்கள் விடிய விடிய 'டாபிக்' மாறிக்கொண்டிருக்கும். சில அறைகளில் கேரம் போர்டோ, சீட்டுக்கட்டோ சூடு கிளப்பிக்கொண்டிருக்கும். இன்னும் சில அறைகளில் நெப்போலியனோ, மார்க்கோப்போலோவோ நூற்றாண்டுகளுக்கப்பாலும் குடிமக்களை உத்வேகப்படுத்திக்கொண்டிருப்பார்கள். 'சிவகாமியின் சபதமோ', 'சிக்ஷ்த் சென்ஸ்' திரைக்கதையோ, கரட்டான்பட்டி பேய்க்கதையோ, காதலி பிரிந்த சோகக்கதையோ, வாத்தியார் பெண்ணுக்கு லெட்டெர் கொடுத்த வீரக்கதையோ எல்லாரிடமும் சொல்லுவதற்கு ஏதாவது இருக்கும். கதை ஏதும் இல்லாதவற்குக் குறைந்தபட்சம் 'ம்...' கொட்டுவதற்குத் திராணி இருக்கும். சில கதைகள் நேயர் விருப்பத்தால் ரிபீட் அடிக்கும்.

அடித்துப்பிடித்து வேலை வாங்கிய காலத்தில், எங்கள் தலைமுறைக்கு அறிமுகம் ஆனது அலைபேசி - மணிக்கணக்கில் அரட்டை அடிக்க ஏதுவாய் இருந்தது - இன்னும் இருக்கிறது. (அடுத்தடுத்த வருடங்களில் அலை பேசி ஒரு அத்தியாவசியப் பொருளாக வளர்ந்தது ஒரு தனிப் பொருளாதார வரலாறு).
கல்லூரி காலத்தில் இருந்த வெட்டிக்கதைகள் போல இன்றும் நிறைய இருக்கின்றன. அவற்றின் கூடவே சேர்ந்து கொண்டவை அலுவலகப் போராட்டங்களும், ஏமாற்றங்களும், சாதனைக் கொண்டாட்டங்களும்..... திருமணம் பற்றிய தயக்கங்களும், கலக்கங்களும், அழைப்புகளும்......பின்னர் - பரிசுக்கு நன்றிகளும்.

திருமணம் ஆகிவிட்ட நண்பர்களிடம் தொடர்பு மெல்ல தேயத்தொடங்குவது உண்மைதான் (தோழிகள் பெரும்பாலும்; தோழர்கள் சிறிய அளவில்). அதற்கான சந்தர்ப்ப, சூழ்நிலை, சமுதாயக் காரணங்கள் இருக்கின்றன. வாழ்வின் இந்தக்கட்டத்தில், இதனால் தானோ என்னவோ எனக்கு 'ROCK ON' திரைப்படத்தின் 'Ye Tumhari Meri Baathein' பாடல் மிகவும் பிடித்து விட்டது என நினைக்கிறேன்.

உலகின் ஏதோ ஒரு IP அட்ரெஸ்ஸில் இருந்து கொண்டு, இதைப்படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களே.....எனது ஆவலும், அப்பாடல் வரிகளின் அர்த்தமும் இதோ:


" நம் நீண்ட பேச்சுகள் தொடரும் இது போன்றே
நம் சந்திப்புகள் தொடரும் இது போன்றே
நம் இரவுகளும் பகல்களும் கழியும் இது போன்றே

பேச்சு முடியும் இடத்தில் தொடரும் புது விஷயங்கள்
அந்த விஷயங்கள் கொண்டே புனைவோம் புதுக் கவிதைகள்
நம் கவிதைகள் இதயங்களை வருடிச் செல்லும்
வார்த்தைகள் இசையில் உருகிக் கரையும்
அர்த்தங்கள் பாடலில் மூழ்கி நிறையும்

அந்தப் பாடல்கள் நம்மை மலர்ச்சியால் அலங்கரிக்கும்
நீ மலர்ந்த பாடல்களை எனக்கும் இசை, நண்பா!"


(கொஞ்சம் உரிமை மீறிக், கருப்பொருள் மாறாமல் சில வார்த்தைகளை மாற்றி உள்ளேன். இந்தியில் பாடலை எழுதியவர், பல அருமையான பாடல்களை எழுதியுள்ள Javed Akthar)

புகைப்படம்: http://www.gettyimages.com

Tuesday, June 2, 2009

நட்பறிதல்

கல்லூரி சினிமா இசை இலக்கியம்
இடை இடையே மெளனம்..
எல்லாம் பேசிக்கொண்டே உன் வீடு வந்து சேர்ந்தோம்;

பிறகே தெரிந்துகொண்டோம்
உன்னிடம் குடை இருந்ததை நானும்
என்னிடம் குடை இருந்ததை நீயும்

சிரிப்படங்கிப்,
பின்னும் பேசிக் கொண்டிருந்தோம் -
நீ - நான் - மழை

Tuesday, March 31, 2009

எல்லாம் வல்லவன்


தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
அணுவைத்துளைத்தால் அதனுள்ளும் இருப்பான் -
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
ஆதிப்பரம்பொருள்
e மேல் மிதக்கும் மைனஸ்

(இதுவும் பழசுதான்....2007ல எழுதினது..)

Saturday, March 21, 2009

திரை கடலும் திரவியமும்




அலை நனைத்த பாதம்
கடல் நனைந்த பெளர்ணமி
ஒட்டி வந்த மணல்
கொட்டி வந்த கனம்
மடல் கடித்த ஈரம்
ஊர்ந்து சென்ற நேரம்
-
எல்லாம் விட சுகம் நம்மிடை நிரம்பிய மெளனம்!

நானும் இந்த தேசத்துக் கடலும் சுகம்;
நண்பனே...நலமறிய ஆவல்
-

நன்றல்லது கர்வம்


உன் 'சுளுக்' வார்த்தையும்
என் 'முணுக்' கோபமும்
முறித்தது உண்மைதான்

வேறெவனிடமோ நீ உதவி கேட்ட அன்றே
விரிசல் விட்டிருந்தது நட்பு.
-

Sunday, January 25, 2009

நெய்தல் திணை


நெசவுக்கலைக்கு இரையாகிறது பட்டுப்பூச்சி
சிலந்தி வலையிலும்.......
என்று ஆரம்பித்தது என் சிலந்திக்காதல். இப்படியாகப் பள்ளிப்பருவத்தில் விட்டத்தைப்பார்த்துக்கொட்டாவி விட்டப்பொழுதுகளில் சில சிலந்தி வலைகளில் கொஞ்சமாகச் சிக்கிச் சீக்கிரமே தப்பித்துக்கொண்டேன். பின்னர் கல்லூரியில் கால் பதித்த மாத்திரத்தில், கவிதையும் பதிக்க எண்ணிக் கூரையைப் பார்த்தபடி கூர் தீட்டிய போது கண்ணில் பட்டன ஒரு எட்டுக்கால் பூச்சியின் கால்கள் எட்டும் எட்டாமல்....அந்தக் கணத்திலிருந்து இன்று வரை தவறாமல் சிக்கிக்கொள்கிறேன் கண்ணில்படும் சிலந்தி வலையில் எல்லாம். சொல்லப்போனால் பாட நூல்களை விட நான் மிகவும் ஒட்டிக்கொண்டது சிலந்தி நூல்களில் தான்.

சுவற்றைப்பார்த்து உறக்க நிலைக்குச் சென்ற மதியங்களில்,

எச்சில் மொழிந்த சிலந்தி,
கட்டி முடித்தது ஒரு கூடு.....
அடடா எச்சத்தில் ஒரு வினை முற்று!!

என்று இலக்கண மயக்கம் வந்ததுண்டு.

எல்லாப் பூச்சிகளும் அமித்தாப் பச்சனைப் போல 6 அடிகளுடன் தோன்றினாலும், இவை மட்டும் ஒருதிருக்குறள் இலவச இணைப்பு வாங்கியது போல் 2 அடிகள் கையூட்டாகப் பெறுகின்றன. சில வகைசிலந்திகளுக்கு எட்டு கண்கள் கூட உண்டாம்......extra கரங்களும் கண்களும் இருப்பதால்சிலந்திகள்தான் பூச்சி வகையராக்களின் கடவுளாக இருக்கும் என்று கூட எண்ணியதுண்டு.

ஒரு முறை குறுக்கெழுத்துப் போட்டிக்குப் புதிர்கள் தயார் செய்யும் பொழுது வழக்கம் போல் ஒருவலையில் சிக்கியதில் 'பழைமைக்கு அடையாளம் இந்த நூலகம் (5)' என்று புதிர் வைத்தேன் - 'நூலாம்படை' என்ற சொல்லுக்கு. 'கன்னிமரா' (இதுவும் ஐந்தெழுத்து) என்று எழுதியவர்கள் எல்லாம்பின்னர் அறைக்கு வந்து ரெளத்திரம் பழகிச்சென்றார்கள்.

மூன்றாம் ஆண்டில் எனக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்ட போது, எனக்கு முன்னரே குடிபுகுந்திருந்தது ஒரு சிலந்தி. 'அறைக்குள் மாளிகையா?' என்று ஒரு கவிதையைத் தெளித்தேன். ஏளனமாய்ப் பார்த்து விட்டு, தன் எச்ச வினையைத் தொடர்ந்தது.

பின்னொரு நாள், என் தந்தையின் வருகைமுன்னிட்டு, அழகியல் கருதி, ஒரு நன்மகனாய், கொஞ்சம்தயக்கத்துடன் சிலந்தி வெளியே சென்றிருந்த பொழுதில் அண்ணாமலை சரத்பாபு போலகூட்டைக்கலைத்தேன். ஒரு மணி நேரத்தில் இன்னும் அழகாய் எழும்பியிருந்தது ஒரு தொங்குதோட்டம்.

எத்தனை முறை வேண்டுமானாலும் கலைத்துக்கொள்..
அற்பனே முடிந்தால் என் கலையைக்கொல்!!
என்று என்னைத் தலை குனியச்செய்தான் அந்த அற்புதக்கலைஞன். அடுத்த நாளே, அறையில் சிலபடங்களை ஒட்டி வைத்தேன். ஒரு படத்தில் மலை, மற்றொன்றில் காடு, மூன்றாவதில் வயல், நான்காவது பாலைவனம். அவற்றின் அடியில், குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, பாலைத்திணை என்று எழுதினேன். சிலந்திக்கூடு இருந்த இடத்தில் நெய்தல் திணை என்றுஎழுதினேன். அங்கு விரிக்கப்பட்டிருந்த வலையில், மீனுக்குப் பதிலாக ஒரு ஈசல் பூச்சி மாட்டிஇருந்தது.

காதலாகிக் கசிந்துருகிய காலத்தில் கூட,

மற்றுமொரு முறை கலைக்கிறேன் காதல்
மீண்டும் குடியேறுகிறாள்
என் காதல் சிலந்தி

என்று உருவகத்திற்கு உருவினேன் சிலந்தி வலையை.

நான்கு ஆண்டு கல்லூரி வாசம் முடிந்து அறையைக் காலி செய்வதற்கு 2 நாட்களுக்கு முன் அன்னாந்துபார்த்த போது, காணாமல் போயிருந்தது சிலந்திக்கூடு.

இன்று கணினிகள் விரித்த வலையில் சிக்கிய பிறகு நேற்று காலை நினைத்துக்கொண்டேன் அந்த ஒற்றடை நாட்களை. இந்நேரம் மற்றுமொரு சிலந்தி ஏதாவது ஒரு அறையில் எவனுக்கேனும் போதி மரம் நெய்து கொண்டிருக்கும். இப்படி உலகெங்கும் நூல் எழுதிக்கொண்டிருக்கும் எல்லாச் சிலந்திக்கும், இந்த எழுத்துக்கள் சமர்ப்பணம் ஆகட்டும் !!!

நன்றி: 'எச்சம்-வினை' வார்த்தை விளையாடிய சேஷாத்ரிக்கும், 'நூலாம்படை' பின்ன நூல் கொடுத்த சுரேஷிற்கும்.
படம்:
http://ringoblog.com/wp-content/uploads/2008/08/spider-web-ring.jpg