Sunday, June 14, 2009

Sweet Nothings!!


கல்லூரி விடுதியில் தங்கிப்படித்த காலங்கள் பசுமை நினைவுகள். நான்கு அல்லது ஐந்து மணி நேரங்களுக்கு மேல் வகுப்பு கிடையாது. இரண்டு மாதங்களில் ஐந்து நாட்களுக்கு மேல் தேர்வு கிடையாது. வாரத்தில் இரண்டு நாட்கள் செய்முறைப்பயிற்சி வகுப்புகள் (PRACTICAL) இருக்கும். அதற்கு முன் தினம் மட்டும் கொஞ்சம் மூளையை வருத்த வேண்டியிருக்கும் (பயிற்சி வகுப்பிற்கு முன்னர் மூளையைப் பயன்படுத்தும் அளவிற்குக்கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை சொன்ன பின்னரே உள்ளே அனுமதி கிடைக்கும்). சனி, ஞாயிறுகளில் வகுப்பு எப்போதும் கிடையாது. அப்பா கொடுத்த ஐனூறையோ ஆயிரத்தையோ செலவு செய்த பிறகு, மீதம் இருந்தது நொடி நொடியாய் நேரம் மட்டும் தான்.

தினமும் பத்து மணிக்கு உறங்கிவிடும் என் போன்ற நல்ல பிள்ளைகள் கூட, வார இறுதி 'மொக்கை'களில் கலந்து கொண்டு கேள்விச்செல்வத்தில் வள்ளுவர் மெச்சும் பிள்ளைகளாய் விடிய விடிய திளைத்திருப்போம். சிம்ரனில் ஆரம்பிக்கும் பேச்சு மெல்ல சித்ராவின் குரலில் கொஞ்சம் லயித்து விட்டு, வைரமுத்துவை கொஞ்சம் வம்பிழுத்து, சிலப்பதிகாரத்தை மேய்ந்து விட்ட பின்னர் ஒரு நண்பன் ஆரம்பிப்பான் - " நான் தூங்கப்போறேன்டா...". பின்னர் கதவருகில் நின்றவாரே, கண்ணகி சிலையைப் பற்றிய விவாதத்தில் கலந்து கொள்வான். அப்படியே சிலிக்கன் சிப்புகள் பற்றி யாராவது புத்திசாலி நண்பன் அரை மணி நேரம் பேச மற்றவர்கள் கொட்டாவி மூலம் நேர்மையான கருத்தைத் தெரிவிப்போம். ஒவ்வொருவராகக் கூட்டதில் இருந்து கலைய, சில கோட்டான்கள் விடிய விடிய 'டாபிக்' மாறிக்கொண்டிருக்கும். சில அறைகளில் கேரம் போர்டோ, சீட்டுக்கட்டோ சூடு கிளப்பிக்கொண்டிருக்கும். இன்னும் சில அறைகளில் நெப்போலியனோ, மார்க்கோப்போலோவோ நூற்றாண்டுகளுக்கப்பாலும் குடிமக்களை உத்வேகப்படுத்திக்கொண்டிருப்பார்கள். 'சிவகாமியின் சபதமோ', 'சிக்ஷ்த் சென்ஸ்' திரைக்கதையோ, கரட்டான்பட்டி பேய்க்கதையோ, காதலி பிரிந்த சோகக்கதையோ, வாத்தியார் பெண்ணுக்கு லெட்டெர் கொடுத்த வீரக்கதையோ எல்லாரிடமும் சொல்லுவதற்கு ஏதாவது இருக்கும். கதை ஏதும் இல்லாதவற்குக் குறைந்தபட்சம் 'ம்...' கொட்டுவதற்குத் திராணி இருக்கும். சில கதைகள் நேயர் விருப்பத்தால் ரிபீட் அடிக்கும்.

அடித்துப்பிடித்து வேலை வாங்கிய காலத்தில், எங்கள் தலைமுறைக்கு அறிமுகம் ஆனது அலைபேசி - மணிக்கணக்கில் அரட்டை அடிக்க ஏதுவாய் இருந்தது - இன்னும் இருக்கிறது. (அடுத்தடுத்த வருடங்களில் அலை பேசி ஒரு அத்தியாவசியப் பொருளாக வளர்ந்தது ஒரு தனிப் பொருளாதார வரலாறு).
கல்லூரி காலத்தில் இருந்த வெட்டிக்கதைகள் போல இன்றும் நிறைய இருக்கின்றன. அவற்றின் கூடவே சேர்ந்து கொண்டவை அலுவலகப் போராட்டங்களும், ஏமாற்றங்களும், சாதனைக் கொண்டாட்டங்களும்..... திருமணம் பற்றிய தயக்கங்களும், கலக்கங்களும், அழைப்புகளும்......பின்னர் - பரிசுக்கு நன்றிகளும்.

திருமணம் ஆகிவிட்ட நண்பர்களிடம் தொடர்பு மெல்ல தேயத்தொடங்குவது உண்மைதான் (தோழிகள் பெரும்பாலும்; தோழர்கள் சிறிய அளவில்). அதற்கான சந்தர்ப்ப, சூழ்நிலை, சமுதாயக் காரணங்கள் இருக்கின்றன. வாழ்வின் இந்தக்கட்டத்தில், இதனால் தானோ என்னவோ எனக்கு 'ROCK ON' திரைப்படத்தின் 'Ye Tumhari Meri Baathein' பாடல் மிகவும் பிடித்து விட்டது என நினைக்கிறேன்.

உலகின் ஏதோ ஒரு IP அட்ரெஸ்ஸில் இருந்து கொண்டு, இதைப்படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களே.....எனது ஆவலும், அப்பாடல் வரிகளின் அர்த்தமும் இதோ:


" நம் நீண்ட பேச்சுகள் தொடரும் இது போன்றே
நம் சந்திப்புகள் தொடரும் இது போன்றே
நம் இரவுகளும் பகல்களும் கழியும் இது போன்றே

பேச்சு முடியும் இடத்தில் தொடரும் புது விஷயங்கள்
அந்த விஷயங்கள் கொண்டே புனைவோம் புதுக் கவிதைகள்
நம் கவிதைகள் இதயங்களை வருடிச் செல்லும்
வார்த்தைகள் இசையில் உருகிக் கரையும்
அர்த்தங்கள் பாடலில் மூழ்கி நிறையும்

அந்தப் பாடல்கள் நம்மை மலர்ச்சியால் அலங்கரிக்கும்
நீ மலர்ந்த பாடல்களை எனக்கும் இசை, நண்பா!"


(கொஞ்சம் உரிமை மீறிக், கருப்பொருள் மாறாமல் சில வார்த்தைகளை மாற்றி உள்ளேன். இந்தியில் பாடலை எழுதியவர், பல அருமையான பாடல்களை எழுதியுள்ள Javed Akthar)

புகைப்படம்: http://www.gettyimages.com

6 comments:

Ityuty said...

Good one...Nostalgic feeling of the past hostel life appears reading your blog...the translated version of the song was nice...

Seshadri T A said...

neghizhnthathu nenjam! arputham HM... :-)

migavum pidithathu... swarasyam kuriyathu kalloori kathai sonathu! thervu seitha vaarthaigal azhagu migunthu, nenjam niraithathu. Vizhiyin vilimbil neer thengiyathum, athai enaku arugamaiyil iruntha Jai kooda unarathathum aacharyam.

meendum padika thuvangugiren!

Arunram said...

பூபேஷ், பதிவு நல்லா இருக்கு.

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு - சும்மா ஒரு 3 மணி வரையிலும் மொக்க போட்டது, cards விளையாண்டது etc. ஒரு flow ல பேசுவோம்.. அடுத்த நாள் இன்னிக்கு என்ன பேசினோம்கறது முக்கியம் இல்ல. ஏன்னா, பேசறதுக்கு இன்னும் நிறைய புது topics இருக்கும்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

பாழ் பட்டுப்போன பழைய பாட்டன் வீட்டுக்குத் திரும்பிப் போய் வந்த உணர்வு. நன்றி பூபி. எனக்கென்றுத் தனியாக பேச, கேட்க என்று ஒரு நண்பர் வட்டம் இருந்தது. உங்களுடனும் பல முறை அந்த வட்டத்தை வரைந்து வைத்திருக்கிறேன். அருண்ராம் சொல்வது போல, நேற்று பேசியது இன்று நினைவிலிருக்க அவசியம் இல்லை. இன்று பேச ஆயிரமாயிரம் செய்திகள் நம் வாசலில் காத்திருக்கின்றன.

பாடல் வரிகளுக்குகான பொருள் கொடுத்தமைக்கு நன்றி! எல்லா நட்புக்களும் வருடங்கள் தாண்டி நிலைப்பதில்லை. நிலைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.

-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

இந்தப் பாட்டுக்கு இதுதானா அர்த்தம்? இது வரையிலும் என்ன பொருள்னு யோசிச்சதில்ல.. ஆனா பாட்ட கேக்குறபோது தொண்டை அடிச்சிக்கறது ஏன்னு இப்பதான் புரியுது. அதெல்லாம் சரி, ஆயிரம் topic-போட்டாலும் நீ "அப்புறம்"னு சொல்லி எங்கள உன்னோட ரூம்-அ விட்டு விரட்டுறதுதான் எனக்கு இப்பயும் ஞயாபகத்துக்கு வருது. :)

Siva said...

Missing all those topic days...