நதிக்கரையில் ஒரு அழகிய கிராமம்.கடைவீதி- பள்ளி-ஆலயம். மணி அடித்ததும் ஆரவாரமாய் வெளியேறும் குழந்தைகள். ஓடிப்பிடித்தும், நொண்டியடித்தும் மாலைப்பொழுதைக் கழிக்கிறார்கள். சூரியன் விடை பெற்றதும், பெற்றோர்கள் பிள்ளைகளை அவசர அவசரமாய் வீட்டுக்குள் அடைக்கிறார்கள் - ஊரடங்கு உத்தரவு.
'ச்சோ'வென சத்தம். ஊரைச்சுத்தம் செய்யத்தொடங்குகிறது வானம். திடீரென்று தோட்டாக்களின் தாண்டவம் - மழையின் சத்தத்தை மட்டுப்படுத்துகிறது. மரங்களாலான குடிசைகளின் சுவர்களை மூர்க்கமாய்த் துளைக்கின்றன தோட்டாக்கள். கட்டிலுக்கடியில் அடைக்கலமாகின்றனர் குழந்தைகளும் அம்மாக்களும். பிள்ளைகள் முகத்தில் இப்போது மழலைக்கு மாறாக பீதி அப்பிக்கொள்கிறது. சில உயிர்களைச் சூரையாடியபின் இளைப்பாருகின்றன சாய்த்து வைக்கப்பட்ட சாயில் துப்பாக்கிகள். பயத்தில் நின்று போயிருக்கிறது மழை. மற்றுமொரு விடியல். கலக்கமாய் உதிக்கிறது சூரியன்.
கொரில்லா வீரர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடக்கும் உள் நாட்டுப்போரில் சிக்கிச் செத்துப்பிழைக்கிறது இந்தக் கிராமம்.
12 வயதான எல்லாச் சிறுவர்களையும் வலுக்கட்டாயமாகப் பணியில் சேர்த்துக்கொள்கிறது ராணுவம். ராணுவத்தின் பெயரில் சொந்த நாட்டுக்காரர்களைக் கொல்ல விரும்பாத ஒரு சிறுவன், கொரில்லாக்களை நாடிச்செல்கிறான். அவன் பிஞ்சு உடலைத் துளை போடுகின்றன ராணுவத்தின் தானியங்கித் துப்பாக்கிகள்.
"Innocent Voices" என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டத் திரைப்படத்தின் சில காட்சிகள் இவை. பல காட்சிகளில் என் கண்களில் நீர் தேங்கியது. எத்தனையோ நாடுகளின் இன்றைய நிகழ்வுதான் இது.
படத்தில் வரும் ஒரு பாடல் வரி: "இன்றும் நேற்றும் ஒன்று தான். நாளை என்பது என்றும் இல்லை"
படத்தின் முடிவில் என் மனதில் ஓடிய எண்ணம்:
எந்தக் கூரையின் மீதும்
குண்டுகள் விழ வேண்டாம் -
எதன் பெயரிலும்.
-------------------------------------------------------------------------
ஒரு திரைப்படம் என்ற பார்வையில், இது மிகவும் நேர்த்தியான படம். பாசம், ஏழ்மை, நம்பிக்கை, கவிதை, அழகு, காதல், வீரம், போராட்டம் அனைத்தும் மிகவும் உண்மையாகக் காட்டப்பட்டுள்ளன. ஒளிப்பதிவு, வசனம், திரைக்கதை, நெறியாள்கை, நடிப்பு,படத்தொகுப்பு எல்லாவற்றிலும் சர்வதேசத்தரம்.
13 years ago
3 comments:
சுஜாதாவின் சிறுகதை ஒன்று நினைவில் தட்டுகிறது. ஏதோ ஒரு தேசத்தின் இராணுவத்துக்கும், போராளிகளுக்கும் ஆயுதம் விற்கும் ஒருவனின் சில நாள் வியாபாரத்தைச் சொல்லும் கதை அது. இரு தரப்புக்குமான போர்தான் இவர்களின் வியாபாரத்திற்கான ஆதாரம் என்பது விஷமாய்ப் புரிய வைக்கப்பட்ட உண்மையாய் இருந்தது.
சேரல், இது கட்டாயம் பார்க்க வேண்டிய படம். மிக்க நேர்த்தி. மிக்க நேர்மை.
எங்கே கிடைக்கும் இந்தப் படம். "Blood Diamond" என்ற படம். அதுவும் கொஞ்சம் நல்லா இருந்தது.
Post a Comment