Monday, November 21, 2011

சிலை வழி மேவும் உளி ஒலி தேடி - I

"களங்களும் அதிர
களிறுகள் பிளிற..
சோழம் அழைத்துப் போவாயோ.."

ஆயிரத்தில் ஒருவன் திரையிசைப்பாடலின் வரிகள் இவை. பாலா மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல் இது. பாடலின் தாக்கத்தில் முடிவு செய்திருக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் அவர் எங்களைப் பெரம்பலூருக்கு அழைத்தார். அங்கிருந்து கங்கைகொண்ட சோழபுரம் அழைத்துப் போவதாகக் கூறினார்.

தட்சிணாமூர்த்தி அவர்கள் எழுதிய "தமிழர் நாகரிகமும் பண்பாடும்" என்ற புத்தகத்தின் பக்கங்கள் கண் முன் விரிந்தன. புத்தகப் பக்கத்தில் படிப்பதை விட, அப்பெட்டகங்களின் பக்கத்திலேயே படிக்கலாம் என்ற ஆவல் எழுந்தது. அத்திட்டத்தை அப்படியே தாரசுரம், தஞ்சை என நீட்டித்தான் சுரேஷ்.

-----

பெரம்பலூரிலிருந்து காலை 6.30க்கு கிளம்பி, அரியலூர், ஜெயங்கொண்டம் வழியே கங்கை கொண்ட சோழபுரம்; அங்கிருந்து அணைக்கரை வழியே கும்பகோணம் தாராசுரம்; அங்கிருந்து தஞ்சை பெரிய கோயில்; மாலை 6.30க்கு தஞ்சையில் இருந்து ஈரோட்டிற்குப் புகை வண்டி - இதுவே எங்கள் திட்டம். பன்னிரண்டு மணி நேரத்தில், பல நூற்றாண்டுப் பயணம். இது வழிபாட்டுப் பயணம் அல்ல, பண்பாட்டுப் பயணம் என்பதைத் தீர்மானித்துக்கொண்டோம்.

-----

தொடரும் முன் ஒரு மைக்ரோ-மினி வரலாறு: முதன்முதலில் கற்கள் கொண்டு கோயில்களைக் கட்டுவித்தவர்கள் பல்லவர்கள். மாமல்லபுரம் தொடக்க நிலை. இதற்கு முன் சுதைமண்ணிலும் மரத்திலும் கோயில்கள் இருந்ததை அறிகிறோம். மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலின் பரிணாம வளர்ச்சியே இடைக்காலச் சோழர்களும், பிற்காலச் சோழர்களும் கட்டுவித்தவை. இவற்றின் விமான வடிவு பௌத்த மதத்தின் தாக்கத்தில் ஏற்பட்டவை என்று கூறுகின்றனர்.

-----

கங்கை கொண்ட சோழபுரம்

ஜெயங்கொண்டத்தில் இருந்து அணைக்கரை செல்லும் சாலையில் 40 நிமிட பேருந்துப் பயணத்தின் பின், சாலை மருங்கில் ஓங்கி நின்று, நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது கங்கை கொண்ட சோழபுரம் கோயில். ராஜேந்திர சோழன் தந்தையை விட எட்டடி பாய நினைத்து, ஏதோ காரணத்தால் தன் முயற்சியைக் குறைத்துக் கொண்டது போன்று தோன்றும் விமான வடிவம். சூரியனை மேல் நோக்கிச் சென்று தொடுவதை விட, கிழக்கு நோக்கிச் சென்று தொட நினைத்து, கிழக்காசியாவைக் கைப்பற்றச் சென்று விட்டான் போலும்.தஞ்சை கோபுரத்தின் புறத்தோற்றத்தில் நேர்கோடுகள் அமைய, இங்கு வளைகோடுகள் அமைகின்றன.விமானத்தின் ஒரு மூலையில்:
யாளிகளும் அவற்றைச் செலுத்துவோரும்:மதில் சுவரில் நந்திகள் - சோழர் கட்டிடக்கலையின் அடையாளம்:பெரிய உருவம் கொண்ட வாயில் காப்பாளர்கள் - சோழர் கட்டிடக்கலையின் அடையாளம்:
இக்கோயிலின் மேல் நம்மவர் வைத்திருக்கும் மதிப்பு:
வெற்றிலைக் கறைகள்-----

தஞ்சையைப் போன்றே இங்கும் பிரகதீசுவரரே மூலவர். கோயிலின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இங்குள்ள நவக்கிரக மேடையைச் சுற்றி வர முடியாது. இதன் அமைப்பு மற்ற கோயில்களை விட மாறுபட்டுள்ளது. சூரிய தேவன் எழு குதிரைகள் கொண்ட ரதத்தைச் செலுத்தும் வகையில் அமைக்கப்பெற்றுள்ளார். இருட்டின் காரணமாகப் பிற கோள்களின் அமைப்பைச் சரியாக ஆராய முடியவில்லை.

-----

நாங்கள் சென்றிருந்த போது சில அயல் நாட்டவரும், புது மணத் தம்பதிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்திருந்தனர்.

-----

வெளியேறும் போது பிச்சைக்காரர்கள் கோயில் வாசலில் கையேந்தி நின்றனர். பாடலை முணுமுணுக்கத் தொடங்கினார் பாலா....

"சிலை வழி மேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்..

ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்..

புலிக்கொடி பொறித்த
சோழ மாந்தர்கள்
எலிக்கறி பொரிப்பதுவோ…

காற்றைக் குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ…"
(தாராசுரம் நோக்கிப் பயணம் தொடரும்...)

3 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல பயணமும், நல்ல பதிவும் நண்பா! கங்கை கொண்ட சோழபுரம் நான் சென்றதில்லை. புகைப்படங்கள் வாயிலாக மட்டுமே அறிந்திருக்கிறேன்; உன் புகைப்படங்கள் மூலமும். 'எலிக்கறி கொறிப்பதுவோ' என்று நினைக்கிறேன். சரிபார்த்துக்கொள்ளவும்.

-ப்ரியமுடன்
பா.சேரலாதன்

Anonymous said...

நல்ல பதிவு. இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். ரொம்ப நாள் ஆசை கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும் என்று ஆசை, புகைப்படம் பிடிக்க. இப்போது நான்காவது தடவை பொன்னியின் செல்வன் படிக்கும் போது அந்த ஆசை மீண்டும் மேலோங்குகின்றது. இந்த பதிவு அதை இன்னும் தூண்டி விடுகின்றது :)

Kit said...

nice travelogue. Waiting for its second part.